கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பையில் உள்ள வீட்டில் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார்.
எம்.எஸ். தோனி திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்த அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து 50 கோடி ரூபாய் பணம் எடுக்கப்பட்டிருப்பதாக சுஷாந்தின் தந்தை கே.கே. சிங் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக சுஷாந்தின் காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நடிகை ரியாவின் பண முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறையும் சுஷாந்த் கொலை வழக்கை சிபிஐயும் விசாரித்து வருகிறது.
சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் பிஹார் போலீஸில் அளித்த புகார் தொடர்பான வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆனால் மும்பை போலீஸ் பதிவு செய்துள்ள வழக்கு இன்னும் சிபிஐ-க்கு மாற்றப்படவில்லை.

அந்த மாநில போலீஸார் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் ரிபப்ளிக் டிவி புதிய வீடியோக்களை வெளியிட்டு சுஷாந்தின் மரணத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அந்த டி.வி ஒளிபரப்பிய வீடியோவில்,நடிகர் சுஷாந்த் இறந்த நாளில் அவரது உடலுக்கு அருகே கருப்பு நிற உடை அணிந்த நபர் கையில் ஒரு கருப்பு பேக்கை வைத்திருக்கிறார்.
அந்த நபர் சுஷாந்தின் வீட்டு மேலாளர் தீபேஷ் சாவந்த் என்று கூறப்படுகிறது.
கருப்பு உடை அணிந்த நபர் கீழே இறங்கி வருகிறார்.
இதற்கிடையில் புளு டிசர்ட் அணிந்த இளம்பெண் ஒருவர் சுஷாந்த் வீட்டுக்குள் நுழைகிறார். கருப்பு உடை நபருடன் பேசுகிறார்.

அதன்பிறகு கருப்பு உடை நபர் கையில் இருந்த கருப்பு பேக்கை காணவில்லை. இவை அனைத்தும் மும்பை போலீஸார் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
இந்த வீடியோ குறித்து சுஷாந்த் குடும்பத்தின் வழக்கறிஞர் விகாஸ் சிங் கூறும்போது, “கருப்பு உடை நபர், கருப்பு பேக், மர்ம பெண் விவகாரங்கள் சந்தேகத்தை எழுப்புகின்றன.
அந்த மர்ம பெண் திடீரென மறைந்துவிட்டார். அவர் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது மும்பை போலீஸார் ஆதாரங்களை அழிக்க முயற்சி செய்வது தெளிவாகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.