கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
பெற்றோர் கவலை
மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வும் ஐஐடி கல்வி நிறுவன சேர்க்கைக்காக ஜேஇஇ நுழைவுத் தேர்வும் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு ஜூலை 26-ம் தேதி நீட், ஜூலை 18-ம் தேதி ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. ரயில், பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து இன்னும் சீராகவில்லை. இந்த சூழ்நிலையில் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வை எவ்வாறு நடத்த முடியும். மாணவ, மாணவருக்கு வைரஸ் தொற்று ஏற்படாமல் எப்படி தடுக்க முடியும் என்று பெற்றோர், கல்வியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
செப். 13-ம்தேதி நீட்
இதைத் தொடர்ந்து மத்திய மனித வளத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் வெள்ளிக்கிழமை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், மாணவ, மாணவியரின் நலன் கருதி நீட் நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் 13-ம் தேதிக்கும் ஜேஇஇ நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதி வரையும் நடைபெறும் என்று அறிவித்தார். மத்திய அமைச்சரின் அறிவிப்பை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்றுள்ளனர்.