அண்ணனுக்கு ஏற்பட்ட ரகசிய நட்பால் அப்பாவி தம்பி கொலை

நெல்லை மாவட்டத்தில் கோயில் முன் செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஊரடங்கு

நெல்லை மாவட்டம் அம்பை அடுத்துள்ள மணிமுத்தாறு அருகே உள்ள மேலஏர்மாள்புரம் கீழ காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலையா. இவருக்கு பாலசுப்பிரமணியன் என்கிற சங்கர், இசக்கிமுத்து ( 23) என 2 மகன்கள். இளையமகன் இசக்கிமுத்துர் கேரளாவில் உள்ள ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார். ஊரடங்கு காரணமாக கேரளாவிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பினார் இசக்கிமுத்து.

அதே பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (35), தொழிலாளி. இவரின் மனைவி லலிதா. லலிதாவுக்கும் பாலசுப்பிரமணியனுக்கும் இடையே ரகிசய பழக்கம் ஏற்பட்டது. இந்த ரகசிய நட்பு, ஊருக்குள் தெரிந்தது. அதனால் கடந்த 29.6.2020-ல் ஊரில் பஞ்சாயத்து நடந்துள்ளது. அதில் லலிதா, பாலசுப்பிரமணியனை ஊர் பெரியவர்கள் கண்டித்துள்ளனர். அதனால் அவமானமடைந்த மகேந்திரன், பாலசுப்பிரமணியனைப் பழிவாங்க திட்டமிட்டார்.

வீடியோ கேம்

இந்தச் சமயத்தில் பாலசுப்பிரமணியன் வெளியூர் சென்று விட்டதால் மகேந்திரன் ஆத்திரத்தில் இருந்தார். 9-ம் தேதி இரவு அங்குள்ள கோயில் முன்பு பாலசுப்பிரமணியனின் தம்பி இசக்கிமுத்து செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு பைக்கில் வந்த மகேந்திரன், மற்றும் அவரின் சகோதரர்கள் உள்பட 4 பேர் இசக்கிமுத்துவிடம் தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இசக்கிமுத்துவை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கு இருந்து தப்பிச் சென்று விட்டனர்.

ரத்த வௌத்தில் கீழே சரிந்த இசக்கி முத்து, உயிருக்கு போராடினார். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பாலையாவிடம் விவரத்தைக் கூறினர். பின்னர் அவர், ஆட்டோவில் இசக்கி முத்துவை அழைத்துக் கொண்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு இசக்கிமுத்துவை பரிசோதித்த டாக்டர்கள். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர். அதனால் பாலையா மற்றும் அவரின் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

கொலை

இந்தக் கொலை சம்பவம் கல்லிடைக்குறிச்சி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷினி, இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இசக்கிமுத்துவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மகேந்திரன், மேலஏர்மாள்புரத்தை சேர்ந்த இளங்கோ (32), முருகன் (30), ராஜா (22) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அடுத்தவரின் மனைவியோடு அண்ணனுக்கு ஏற்பட்ட ரகசிய நட்பால் அப்பாவி தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *