நேபாளத்தில் கடந்த 240 ஆண்டுகளுக்கும் மேலாக மன்னராட்சி நடைபெற்றது. நேபாளம் என்றால் இந்துக்களின் பூமி என்று அர்த்தம். உலகின் ஒரே இந்து நாடு என்ற பெருமையை பெற்ற இந்த நாட்டில் கடந்த 2008-ம் ஆண்டில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது.
நேபாளத்தில் நீண்டகாலமாக கொரில்லா போரில் ஈடுபட்டு வந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் அரசியல் இயக்கமாக மாறியது. இப்போது அந்த கட்சிதான் நேபாளத்தில் ஆட்சி செய்து வருகிறது.
நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே மிக நீண்ட காலமாக நட்புறவு நீடிக்கிறது. விசா இல்லாமலேயே நேபாளத்துக்கு செல்ல முடியும். ஆனால் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறது.
சீனாவின் தூண்டுதலின்பேரில் இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சில பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதுதொடர்பாக புதிய வரைபடத்தை வெளியிட்டு அதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் நேபாள பிரதமர் சர்மா ஒளி சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் நேற்று கூறும்போது, “உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது. இந்தியாவில் கிடையாது. பகவான் ராமர் நேபாளி. அவர் நிச்சயமாக இந்தியர் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.
அவரது சர்ச்சை கருத்துக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் சர்மா ஒலியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.