மத்திய புவி அறிவியல் துறையின் கீழ் செயல்படும் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் மவுசம் (Mausam) என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியில் நாட்டின் 200 நகரங்களின் வானிலை நிலவரம் 3 மணி நேரத்துக்கு ஒருமுறை வெளியிடப்படும்.
டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களின் ஈரப்பதம், காற்றின் வேகம், திசை உள்ளிட்ட அனைத்து வானிலை தகவல்களும் நாள்தோறும் 8 முறை தகவல்கள் புதுப்பிக்கப்படும்.
அடுத்த 7 நாட்களுக்குள் 450 நகரங்களின் வானிலை நிலவரத்தை செயலி வாயிலாக அறிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

புயல், கனமழை உள்ளிட்ட ஆபத்தான வானிலை குறித்து வெவ்வேறு நிறங்களில் எச்சரிக்கை சமிக்ஞை அளிக்கப்படும். இந்த செயலியை பிளே ஸ்டோர், ஆப்ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். எப்போது மழை பெய்யும்? எப்போது வெயில் சுட்டெரிக்கும்? கையில் குடையை எடுத்துச் செல்லலாமா, வேண்டாமா என்பதை இனிமேல் மவுசம் செயலி வாயிலாக அறிந்து கொள்ளலாம்.