சீனாவுக்கு சவால் விடும் இந்தியா

சீனாவுக்கு சவால் விடும் இந்தியா , எல்லையில் சாலை உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது.

லடாக் எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக போர் பதற்றம் நீடிக்கிறது. 

இந்திய ராணுவத்தின் வசதிக்காக பாகிஸ்தான், சீன எல்லைப் பகுதிகளில் சாலை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. 

இதன்படி லடாக்கில் புதிதாக 7 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதேபோல காஷ்மீரில் 10, இமாச்சல பிரதேசத்தில் 2, உத்தராகண்ட், அருணாச்சல பிரதேசத்தில் தலா 8 பாலங்கள், சிக்கிம், பஞ்சாபில் தலா 4  பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 

ஒட்டுமொத்தமாக 44 முக்கிய பாலங்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி வாயிலாக இன்று திறந்துவைத்தார்.  

அருணாச்சல பிரதேசத்தின் நெச்சிபூ பகுதியில் 450 மீட்டர் தொலைவுக்கு புதிதாக குகைப் பாதை அமைக்கவும் அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். 

“வடக்கு, கிழக்கு எல்லைப் பிரச்சினை அனைவருக்கும் தெரியும். முதலில் பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினையை ஏற்படுத்தியது. தற்போது லடாக் எல்லையில் சீனா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. 

சீனாவும் பாகிஸ்தானும் ஏதோ திட்டத்தோடு செயல்படுகின்றன. இரு நாடுகளுடனும் இந்தியா சுமார் 7,000 கி.மீ. தொலைவு எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது.  இந்தப் பகுதிகள் முழுவதுமே பதற்றம் நிலவுகிறது.

வலுவான தலைமை

பிரதமர் நரேந்திர மோடியின் வலுவான தலைமையின் கீழ் பாதுகாப்பு சார்ந்த அனைத்து பிரச்சினைகளையும் இந்தியா தீரமாக எதிர்கொண்டு வருகிறது. 

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் வரலாற்று சிறப்பு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. 

இந்திய எல்லைப் பகுதிகளில் புதிதாக 44 முக்கிய பாலங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த பாலங்கள் ராணுவத்துக்கு மட்டுமல்ல. 

உள்ளூர் மக்களுக்கும் வரப்பிரசாதமாக அமையும். எல்லை சாலைகள் அமைப்பு மிக குறுகிய காலத்தில் புதிய பாலங்களை கட்டி முடித்துள்ளது” என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 

இமாச்சல பிரதேசம், லடாக்கை இணைக்கும் லே-மணாலி நெடுஞ்சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட 9.02 கி.மீ. தொலைவு குகைப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3-ம் தேதி திறந்துவைத்தார். 

இதே சாலையில் மேலும் 2 இடங்களில் குகைப் பாதை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தின் பிசிடி சாலையில் ஏற்கெனவே 1.8 கி.மீ தொலைவுக்கு குகைப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த குகைபாதை திறக்கப்பட்டால் சீன எல்லைக்கு செல்வதற்கான தொலைவு 10 கி.மீ. வரை குறையும். 

சீனாவுக்கு சவால் விடுக்கும் வகையில் எல்லையில் சாலை உள்கட்டமைப்புகளை இந்தியா மேம்படுத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *