புதிதாக ஆயுத பதுங்கு குழிகளை அமைத்த சீன ராணுவம்

டோக்லாமில் இருந்து 7 கி.மீ. தொலையில் சீன ராணுவம் புதிதாக ஆயுத பதுங்கு குழிகளை அமைத்திருப்பது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

லடாக்கின் காராகோரத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் ஜாசப்லா வரை 3,488 கி.மீ. தொலைவுக்கு இந்திய, சீனா எல்லைப் பகுதி நீள்கிறது. கடந்த 1962-ம் ஆண்டில் லடாக் மற்றும் வடகிழக்கு மாநில எல்லைப் பகுதிகளில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் நடைபெற்றது. 

இதன்பின் கடந்த 2017 ஜூன் மாதம் இந்தியாவின் சிக்கிம் மாநிலம், பூடான், சீன எல்லைப் பகுதிகள் சந்திக்கும் டோக்லாமில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீற முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் போர் பதற்றம் எழுந்தது. 72 நாட்களுக்குப் பிறகு சீன வீரர்கள் பின்வாங்கினர். 

கடந்த மே மாத தொடக்கத்தில் லடாக் எல்லைப் பகுதிகளில் சீன வீரர்கள் அத்துமீற முயன்றனர். அங்கு கடந்த ஜூன் 15-ம் தேதி இருநாடுகளின் வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தற்போது போர் பதற்றம் சற்று தணிந்திருக்கிறது.

செயற்கைக்கோள் புகைப்படங்கள்

இந்த பின்னணியில் இந்தியாவின் சிக்கிம் மாநிலம், டோக்லாம் எல்லைப் பகுதியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் சீன ராணுவம் புதிதாக ஆயுத பதுங்கு குழிகளை அமைத்திருப்பது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

இதுகுறித்து சர்வதேச செயற்கைக்கோள் புகைப்பட நிபுணர் சிம் டேக் கூறும்போது, “டோக்லாம் எல்லையை ஒட்டி அமைந்துள்ள சீனாவின் பாங்டா கிராமத்தில் அந்த நாட்டு ராணுவம் ஆயுத பதுங்கு குழிகளை அமைத்துள்ளது. போர் மூண்டால் கடுமையான தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவாக சீன ராணுவம் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகிறது” என்று தெரிவித்தார்.

இந்திய ராணுவத்தின் வடக்கு பிராந்திய முன்னாள் கமாண்டர் எச்.எஸ். பனாக் கூறும்போது, “செயற்கைக்கோள் புகைப்படங்களை ஆய்வு செய்யும்போது, சீன ராணுவம் புதிதாக ஆயுத பதுங்கு குழிகளை அமைத்திருப்பதாகவே தோன்றுகிறது” என்றார்.

மேலும் டோக்லாம் எல்லைப் பகுதியில் எந்த கால சூழ்நிலையிலும் பயணம் செய்யும் வகையில் 9 கி.மீ. தொலைவுக்கு சீன ராணுவம் புதிதாக சாலையும் அமைத்துள்ளது. 

சர்வதேச புவியியல் ஆய்வு அமைப்பான ‘ஸ்டார்ட்பார்’ கடந்த செப்டம்பரில் வெளியிட்ட ஆய்வறிக்கையில், “கடந்த 3 ஆண்டுகளில் எல்லைப்பகுதிகலில் சீனாவின் விமானப்படைத் தளங்கள், ஹெலிகாப்டர் தளங்களை இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோழிக் கழுத்து பகுதி

டோக்லாம் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் புதிதாக சாலை அமைப்பதும், ஆயுத பதுங்கு குழிகளை அமைப்பதும் இந்தியாவுக்கு ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.   

மேற்குவங்கத்தின் சிலிகுரியில் அமைந்துள்ள குறுகலான பாதை, கோழிக் கழுத்துப் பகுதி என்று அழைக்கப்படுகிறது. இந்த பாதைதான், வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவுடன் இணைக்கிறது. டோக்லாமில் இருந்து 20 கி.மீ. தொலைவில் கோழிக் கழுத்து பகுதி அமைந்திருக்கிறது. இதன் இருபுறமும் நேபாளம், வங்கதேச எல்லைகள் அமைந்துள்ளன. வடபகுதியில் பூடான் எல்லை உள்ளது. 

டோக்லாமை ஒட்டிய பூடான் எல்லைப் பகுதியை ஆக்கிரமிக்க சீனா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இந்த முயற்சிகளை இந்திய ராணுவம் வெற்றிகரமாக தடுத்து வருகிறது. தற்போது டோக்லாம் எல்லையை ஒட்டிய சீன கிராமத்தில் புதிதாக ஆயுத பதுங்கு குழிகள், சாலை அமைக்கப்பட்டிருப்பதை தீவிர பிரச்சினையாக எடுத்துக் கொண்டிருப்பதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *