கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு! ரஷ்ய விஞ்ஞானிகள் அறிவிப்பு

கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்ய விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.


உலகம் முழுவதும் ஒரு கோடியே 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 லட்சத்து 71 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதையும் கொரோனா ஆட்டிப் படைத்து வருகிறது.

ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகளின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து வருகிறது. வறுமையும் வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்து வருகின்றன.


அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவை கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளன. ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் விஞ்ஞானிகளும் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.


இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனையை தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு இந்த மருந்து சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த சூழ்நிலையில், ரஷ்ய விஞ்ஞானிகள் கொரோனாவுக்கு புதிய மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.


இதுதொடர்பாக அந்த நாட்டின் அரசு ஊடகமான ‘டாஸ்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “ரஷ்யாவின் செசினோவ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் கண்டுபிடித்த மருந்து கடந்த ஜூன் 18-ம் தேதி 18 பேரின் உடலில் செலுத்தி சோதித்து பார்க்கப்பட்டது. 18 பேரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தனர்.

அடுத்து கடந்த ஜூன் 23-ம் தேதி மேலும் 20 பேரின் உடலில் மருந்து செலுத்தப்பட்டது. அவர்கள் 20 பேரும் பூரண குணமடைந்தனர். யாருக்கும் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. உலகத்தில் முதன்முறையாக கொரோனாவுக்கு ரஷ்ய விஞ்ஞானிகள் மருந்து கண்டுபிடித்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய மருந்து வரும் செப்டம்பரில் வர்த்தகரீதியாக விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *