புது கல்வி கொள்கை..புது அமைச்சகம்.. ஒ.கே. சொன்னது மத்திய அமைச்சரவை

புதிய கல்வி கொள்கையை வரையறுக்க கடந்த 2017-ம் ஆண்டில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கடந்த 2019 ஜூன் 1-ம் தேதி தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையை வெளியிட்டது.
இதில் இடம்பெற்றிருந்த மும்மொழிக் கொள்கைக்கு தென்னிந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

குறிப்பாக தமிழகத்தில் இருமொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்படும் நிலையில் எதிர்ப்பு வலுத்தது. இதைத் தொடர்ந்து மும்மொழிக் கொள்கையை வலியுறுத்த மாட்டோம் என்று மத்திய அரசு உறுதியளித்தது.தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை வெளியானபோதே கல்வியாளர்கள், சமூகநல ஆர்வலர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.


மூன்று வயது குழந்தையால் 3 மொழிகளை படிக்க முடியுமா? 8-ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு தேவையா? நீட் தேர்வு உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளால் கிராமப்புற மாணவர்களின் நிலைமை என்னவாகும்? சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மாநில கல்வி என பல்வேறு கல்வி முறைகள் நடைமுறையில் இருக்கும்போது பொதுவான கல்வி கொள்கை எவ்வாறு பொருந்தும் என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பினர்.


இந்த சூழ்நிலையில் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. 34 ஆண்டுகளுக்குப் பிறகு கல்வி கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்தியாவின் கல்வித் தரம் உலகத் தரத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் உறுதிபட கூறுகின்றன.


அதோடு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் பெயரும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. இனிமேல் அந்த அமைச்சகம், மத்திய கல்வி அமைச்சகமாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இன்று மாலை 4 மணிக்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் நிஷாங்கும் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் நிருபர்களை சந்திக்க உள்ளனர்.


அப்போது புதிய கல்வி கொள்கை தொடர்பான முழு விவரங்கள் நிருபர்களுக்கு வழங்கப்படும். இதன்பிறகே அதன் சாதக, பாதகங்கள் குறித்து அலசி ஆராயப்படும். குறிப்பாக தென்னிந்தியாவுக்கு எதிரான விவகாரங்கள் ஏதேனும் உள்ளனவா என்பது குறித்து பூதக்கண்ணாடி மூலம் தேடப்படும். ஏதாவது ஒரு மூலையில் இந்தி திணிப்பு தெரியவந்தால் தென்னிந்தியாவில் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *