தமிழகத்தில் ரூ.25,000 கோடி தொழில் முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு கடந்த புதன்கிழமை விரிவான அறிக்கையை வெளியிட்டது.
“தமிழக முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றை சாளர அனுமதிகளுக்கான உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் நிலுவையில் இருந்த 26 தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டன. இதன் மூலம் தமிழகத்துக்கு ரூ.25,213 கோடி முதலீடு கிடைக்கும். சுமார் 49,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ராம்ராஜ் நிறுவனத்தின் ஆடைகள் உற்பத்தி திட்டம், மோபிஸ் இந்தியா நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம், சீயோன் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் நிறுவனத்தின் மின்னணு பொருட்கள் உற்பத்தி திட்டம் உள்ளிட்டவை தொடங்கப்பட உள்ளன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளில் புதிய ஆலைகள் அமைய உள்ளன” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.