ஆயிரம் ரூபாய் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி – இலவசமாக வழங்க மத்திய அரசு திட்டம்

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனாவுக்கு புதிய தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இதுவரை 2 கட்டங்களாக மனிதர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 1,077 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகள் நம்பிக்கை அளிக்கிறது.


சிம்பன்சி குரங்குகளிடம் இருந்து சாதாரண சளியை ஏற்படுத்தக்கூடிய வைரஸை எடுத்து அதனை மரபணு மாற்றம் செய்து புதிய தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த தடுப்பூசியை மனித உடலில் செலுத்தும்போது நோய் எதிர்ப்பு சக்தி விழித்தெழும். இதன்மூலம் கொரோனா வைரஸுக்கு கொள்ளி போடப்படும்.

செரம் இன்ஸ்டிடியூட் தலைவர் ஆதர் பொன்னவாலா


புதிய தடுப்பூசியை வர்த்தகரீதியில் விற்பனை செய்யாமல் மனித குலத்தை காப்பாற்றுவதற்காக குறைந்த விலையில் வழங்குவோம் என்று ஆக்ஸ்போர்டு அறிவித்துள்ளது. இதற்காக இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த செரம் இன்ஸ்டிடியூடன், ஆக்ஸ்போர்டு கைகோத்துள்ளது.


ஆக்ஸ்போர்டு சார்பில் செரம் இன்ஸ்டிடியூட்டும் மனிதர்களுக்கு தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை நடத்தி வருகிறது. இந்த இந்திய நிறுவனம் ஏற்கெனவே 2 கட்ட பரிசோதனைகளை முடித்துவிட்டது. ஆக்ஸ்போர்டுடன் இணைந்து இறுதிகட்ட பரிசோதனையை அடுத்த வாரம் தொடங்க செரம் இன்ஸ்டிடியூட் மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள்.


இதுகுறித்து அந்த நிறுவன தலைவர் ஆதர் பொன்னவாலா கூறுகையில், “ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்காக கொரோனா மருந்து உற்பத்தியை விரைவில் தொடங்க உள்ளோம். இதில் 50 சதவீத மருந்து இந்தியாவுக்கு வழங்கப்படும். மீதமுள்ள 50 சதவீத மருந்தை பல்வேறு நாடுகளுக்கு அனுப்ப உள்ளோம். அதிக அளவில் உற்பத்தி செய்யும்போது ஒரு தடுப்பூசியை ஆயிரம் ரூபாய்க்கு வழங்க முடியும்” என்று தெரிவித்தார்.


ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு பெருமளவில் கொள்முதல் செய்து மக்களுக்கு இலவசமாக வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *