சென்னை குடிநீர் தேவைக்கு ரூ.4,500 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரின் தேவைக்கு தற்போது ஆண்டுக்கு 12 டிஎம்சி நீர் தேவைப்படுகிறது. தற்போது வரை ஆண்டுக்கு 11 டிஎம்சி நீர் கூட விநியோகிக்க முடியவில்லை.
இந்த சூழலில் வரும் 2050-ம் ஆண்டில் சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவை ஆண்டுக்கு 26.72 டிஎம்சியாக அதிகரிக்கும் என நீர் ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.
எனவே, தற்போதே அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக பொதுப் பணித்துறை, சென்னை குடிநீர் வாரியம் இணைந்து திட்ட அறிக்கை தயார் செய்தது.
அதன்படி சென்னை அருகே உள்ள பாசனத்துக்கு பயன்படாத மற்றும் கழிவுநீர் கலந்த 60 ஏரிகளை புனரமைத்து குடிநீருக்காக தண்ணீர் எடுக்க தேர்வு செய்யப்பட்டது.
அதேபோன்று கழுவேலி ஏரி நீர், வாயலூர் தடுப்பணை நீர் கொண்டு வந்தால் சென்னைக்கு ஆண்டுக்கு 6 டிஎம்சி கிடைக்கும். இதற்காக, பொதுப்பணித்துறை சார்பில் 3 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று கழிவுநீர் கலந்த ஏரிகளை சுத்தம் செய்து, அந்த ஏரிகளை மறு புனரமைப்பு பணி மேற்கொள்ள 1,500 கோடி.
2050 ஆண்டில் இருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப சென்னை மாநகரில் நெடுஞ்சாலைத் துறை, சென்னை மாநகராட்சி சார்பில் பாலங்கள், சாலைகளை அகலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள 5 ஆயிரம் கோடி வரை நிதி தேவைப்படுகிறது.
இதற்காக தமிழக அரசு சார்பில் உலக வங்கியிடம் நிதி கேட்கப்படுகிறது. இது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் தமிழக அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.