தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் பெற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து நல்ல பலன் அளிப்பதாக கூறப்படுகிறது. இந்த மருந்துக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசு சார்பில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக ரெம்டேசிவிர் மருந்து விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
ஆனால் சிறப்பு கவுன்ட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் நேரடி விநியோக திட்டத்தை தமிழக அரசு நிறுத்தியுள்ளது. அதற்குப் பதிலாக தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செய்யப்படுகிறது.
இதற்காக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் htts://tnmsc.tn.gov.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் நோயாளியின் விவரங்களை பதிவு செய்து ரெம்டெசிவிர் மருந்தினை பெற்றுக் கொள்ளலாம்.
அரசிடம் இருந்து வாங்கும் அதே விலையிலேயே நோயாளிகளுக்கு அளிக்க வேண்டும். ஆக்சிஜன் தேவைக்கும் இந்த இணையத்தை தனியார் மருத்துவமனைகள் பயன்படுத்தலாம். பொதுமக்கள் இந்த இணையம் மூலம் படுக்கை வசதிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.