நியூஸிலாந்து நாட்டின் அமைச்சராக சென்னையை சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் (41) நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் நியூஸிலாந்து அமைச்சராவது இதுவே முதல்முறையாகும்.
கடந்த அக்டோபர் 17-ம் தேதி நியூஸிலாந்து நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் ஜெசிந்தா தலைமையிலான ஆளும் தொழிலாளர் கட்சி அபார வெற்றி பெற்றது. கரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியததால் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் தொழிலாளர் கட்சிக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
பிரதமர் ஜெசிந்தா தனது புதிய அமைச்சரவையை இன்று அறிவித்தார். இதில் 20 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் கேபினட் அமைச்சர்கள் ஆவர். பிரதமர் ஜெசிந்தா தலைமையில் நடைபெறும் அனைத்து அமைச்சரவை கூட்டங்களிலும் இவர்கள் பங்கேற்பார்கள்.
மேலும் கேபினட் அந்தஸ்து இல்லாமல் 4 பேர் இணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையை சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் இடம்பெற்றுள்ளார்.

கேரளாவின் எர்ணாகுளம் அருகே பரவூரை பூர்விகமாகக் கொண்ட பிரியங்காவின் குடும்பத்தினர் சென்னையில் வசித்து வந்தனர். கடந்த 1979-ம் ஆண்டில் சென்னையில் பிரியங்கா பிறந்தார். அதன்பிறகு அவரது குடும்பம் சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்தது. அங்கிருந்து அவர்கள் நியூஸிலாந்தில் குடியேறினர்.
நியூஸிலாந்தில் ஆக்லாந்தில் வசிக்கும் பிரியங்கா, சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த 2006-ம் ஆண்டில் தொழிலாளர் கட்சியில் இணைந்தார். ஆக்லாந்தில் செயல்படும் தமிழ் கூட்டமைப்பின் விழாக்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் மவுங்காகேக்கி தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியைத் தழுவினார். எனினும் திறமையின் அடிப்படையில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சமூகம், இனம், சிறுபான்மை, இளைஞர், சமூக மேம்பாடு, வளர்ச்சித் துறைகள் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
நியூஸிலாந்து அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் அமைச்சராக பதவியேற்பது இதுவே முதல்முறையாகும். பிரதமர் ஜெசிந்தாவின் அமைச்சரவையில் அனைத்து இனங்கள், மதங்களைச் சேர்ந்த மக்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.