Newly married lady commits suicide in Chennai Avadi

சென்னை ஆவடி, நந்தவனமேடு, காந்தி தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் திருநின்றவூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செண்பகவல்லி என்பவரின் மகள் நாகேஸ்வரி என்கிற நிவேதாவுக்கும் கடந்த 17.5.2021-ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பிறகு நிவேதா, தன்னுடைய அம்மா வீட்டிலேயே இருந்தார். மணிகண்டன் மட்டும் சென்னையில் தங்கியிருந்து வேலைப்பார்த்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 16-ம் தேதி மணிகண்டனையும் நிவேதாவையும் ஆவடியில் தனிக்குடித்தனம் வைத்தனர். 18-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த நிவேதா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனால் நிவேதா குடும்பத்தினரும் மணிகண்டனும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ஆவடி காவல் நிலையத்தில் செண்பகவல்லி புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோபிநாத், வழக்கு பதிவு செய்து நிவேதாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

போலீஸார் நடத்திய விசாரணையில் நிவேதாவுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என தெரியவந்தது. மேலும் நிவேதா, கணவருடன் சந்தோஷமாக வாழ முடியவில்லை என செண்பகவல்லிக்கு போன் செய்து கூறியதும் தெரிந்தது. நிவேதா, தன்னுடைய தோழி ஒருவருடன் அடிக்கடி போனில் பேசி வந்ததை கண்டித்ததால்தான் இந்த விபரீத முடிவை அவர் எடுத்ததாக இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.
இருப்பினும் திருமணமாகி சில மாதங்களே ஆவதால் திருவள்ளூர் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வாழ்க்கையை தொடங்க வேண்டிய நேரத்தில் விபரீத முடிவை நிவேதா எடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *