செய்தி துளிகள்.. சில வரிகளில்…

செய்தி துளிகள்..சில வரிகளில்… தொகுக்கப்பட்டுள்ளன.

காஸ் சிலிண்டர் மானியம் ரத்து?

சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மானியத்துக்காக ஒதுக்கப்பட்ட ரூ.20,000 கோடியை கொரோநா வைரஸ் தடுப்பு பணிக்கு பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

வட்டிக்கு வட்டி விதிப்பதை தள்ளுபடி செய்ய முடியாது

கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டுக் கடன் உள்ளிட்டவற்றுக்கான கடன் தவணை செலுத்துவதில் இருந்து 6 மாதங்கள் விலக்கு அளிக்கப்பட்டது.

இந்த கால கட்டத்தில் அரசு, தனியார் வங்கிகள் வட்டிக்கு வட்டி விதித்தன. இதனால் மக்களின் தலையில் பெரும் சுமை கூடியது.

இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அ்பபோது கொரோனா ஊரடங்கில் வழங்கப்பட்ட தவணை சலுகையை பயன்படுத்தியவர்களுக்கு வட்டிக்கு மேல் வட்டி விதிப்பது கைவிட முடியாது. தள்ளுபடி செய்ய முடியாது” என்று மத்திய அரசு தெரிவித்தது.

மணல் கடத்தலில் சிக்கினால் முன்ஜாமீன் கிடையாது

மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கியவர்கள் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த 40 மனுக்கள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

இந்த மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார். மேலும் மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு முன் ஜாமீன் கிடையாது என்று நீதிபதி அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

சேர்க்கையை திரும்பப் பெறும் மாணவர்களுக்கு
முழுமையான கட்டணத்தை வழங்க வேண்டும்

தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் நடப்பாண்டு சேர்ந்த மாணவ, மாணவியர் வரும் நவம்பர் 10-ம் தேதிக்குள் சேர்க்கையை திரும்பப் பெற்றால் அவர்கள் செலுத்திய கல்வி கட்டணத்தை முழுமையாக திரும்ப வேண்டும்.

இல்லையெனில் விதிமுறைகளின்படி கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அகில இந்திய தொழில் நுட்ப கல்விக் குழுமம் உத்தரவிட்டுள்ளது.

பட்டாபிராமில் 21 மாடியில் உருவாகிறது ‘டைடல் பார்க்’

ஆவடியை அடுத்த பட்டாபிராமில் ரூ.230 கோடியில் டைடல் பார்க் எனும் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைய உள்ளது. கடந்த ஆகஸ்ட் 3 முதல் கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. 18 மாதங்களில் கட்டுமான பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

21 மாடி கட்டிடமாக டைடல் பார்க் கட்டப்படுகிறது. இதன் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று ஆவடி எம்எல்ஏவும் அமைச்சருமான பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். டைடல் பார்க் கட்டுமான பணிகளை அவர் அண்மையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.