காற்று மாசு.. மோசமான நகரங்களில்.. பட்டாசுக்கு தடை…

காற்று மாசு மோசமாக உள்ள நகரங்களில் பட்டாசு விற்க, வெடிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

வரும் 14-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பட்டாசு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், சிக்கிம், சண்டிகர் யூனியன் பிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநில அரசுகள் பட்டாசு விற்பனைக்கு ஏற்கெனவே தடை விதித்துள்ளன. 

காற்று மாசு தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல் இன்று முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

கரோனா வைரஸ் என்ற இக்கட்டான காலத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறோம். காற்று மாசால் கரோனா வைரஸ் நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் ஆபத்து உள்ளது. இந்த நேரத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்கிறது.

தலைநகர் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் காற்று தரக் குறியீடு அபாய அளவைத் தொட்டுள்ளது. இதனால் மக்களின் உடல் நலன் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

எனவே டெல்லி, என்சிஆர் பகுதிகளில் நவம்பர் 9 முதல் 30-ம் தேதி அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் முழுமையான தடை விதிக்கப்படுகிறது. நாடு முழுவதும் காற்று மாசு மோசமான நிலையில் உள்ள நகரங்களுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும். 

இது தவிர, காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களில்  பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்க வேண்டும். அந்தந்த மாநில அரசுகள் நிர்ணயித்துள்ள கால நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். தீபாவளி, சாத், கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளின்போது இந்த கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

காற்று மாசைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள், மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் மேற்கொள்ள வேண்டும். அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், காவல் துறை அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் துறை தலைவர்கள் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.

பட்டாசு தடையால் பொருளாதார இழப்பு ஏற்படும் என்ற வாதத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. எல்லாவற்றையும்விட மக்களின்  உடல் நலனே முக்கியமானது. 

சுத்தமான காற்றை சுவாசிக்கும் உரிமை மக்களுக்கு உள்ளது. பொருளாதார நடவடிக்கைகளை காரணம் காட்டி அந்த உரிமையை யாரும் பறிக்க முடியாது. காற்று மாசை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் தீர்ப்பாயம் தனது அதிகாரத்தை பயன்படுத்தும்” என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாய வழக்கு விசாரணையின்போது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் காற்று மாசு அதிகமாக உள்ள 122 நகரங்களின் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது. அந்த பட்டியலில் தமிழகத்தின் திருச்சி, தூத்துக்குடி நகரங்கள் இடம்பெற்றுள்ளன. தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி இந்த இருநகரங்களிலும் பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்க  வேண்டும். 

டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கூறும்போது, “நவம்பர் 9 முதல் 30-ம் தேதி வரை டெல்லியில் பட்டாசு விற்க, வெடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் தடைவிதித்துள்ளது.  தடையை மீறி யாராவது பட்டாசு வெடித்தால் சட்ட விதிகளின்படி 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்” என்று தெரிவித்தார். 

காற்று தரக் குறியீடு (ஏ.கியூ.ஐ.) 6 வகைகளாக தரம் பிரிக்கப்பட்டிருக்கிறது. 0-50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் பாதுகாப்பானது. 51-100 புள்ளிகள் இருந்தால் மிதமானது. 101 முதல் 150 புள்ளிகள் இருந்தால் நோயாளிகளின் உடல்நலத்துக்கு தீங்கானது. 151 முதல் 200 புள்ளிகள் வரை இருந்தால் ஆரோக்கியமான மக்களின் உடல் நலனுக்கும் தீங்கு விளைவிக்கும். 201 முதல் 300 வரை இருந்தால் மக்களின் உடல்நலனுக்கு அதிக தீங்கினை விளைவிக்கும். 301 முதல் 500 வரை இருந்தால் மிகவும் அபாயகரமானதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *