நித்தி..நீ எங்கய்யா இருக்க.. தனி நாடு, தங்க கரன்ஸி…

தனி நாடு, தங்க கரன்ஸி நாணயங்களை நித்யானந்தா வெளியிட்டுள்ளார். அவரது நாட்டில் குடியேற விரும்புவோர், நித்தி.. நீ எங்கய்யா இருக்க என்று ஏக்கத்தோடு கேட்கின்றனர்.

கடந்த 1978 ஜனவரி 1-ம் தேதி தமிழகத்தின் திருவண்ணாமலையில் அருணாச்சலம், லோகநாயகி தம்பதியரின் 2-வது மகனாக நித்யானந்தா பிறந்தார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ராஜசேகரன்.

ஆன்மிக பாதையை தேர்ந்தெடுத்த அவர் தனது பெயரை நித்யானந்தா என்று மாற்றிக் கொண்டார்.

புதிய தங்க நாணயங்களை வெளியிட்ட நித்தி
புதிய தங்க நாணயங்களை வெளியிட்ட நித்தி

ரஞ்சிதாவுடன் நெருக்கம்

கர்நாடகாவின் ராம்நகர் மாவட்டம் பிடதியில் அவர் ஆசிரமத்தை ஏற்படுத்தினார். ஆன்மிகத்தில் அவர் வளர்ந்து வந்தபோது, கடந்த 2010-ம் ஆண்டில் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதன்பிறகு அவரது சிஷ்யை ஒருவர், நித்யானந்தா மீது பலாத்கார புகார் கூறினார். இதுதொடர்பாக ராம்நகர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நித்யானந்தா ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்தார்.

குஜராத்தின் அகமதாபாத்திலும் நித்யானந்தாவுக்கு ஆசிரமம் உள்ளது. அந்த ஆசிரமத்தின் மீது முன்னாள் ஊழியர் ஜனார்தன சர்மா புகார் அளித்தார்.

புதிய கைலாசா நாடு, தனிக்கொடி.
புதிய கைலாசா நாடு, தனிக்கொடி.

தனது 2 மகள்களை நித்யானந்தா அடைத்து வைத்திருப்பதாக குஜராத் உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கிலும் நித்யானந்தா ஆஜராகவில்லை.

புதிய நாடு கைலாசா

இதுவரை சுமார் 50 நீதிமன்ற விசாரணைகளுக்கு நித்தி டிமிக்கி கொடுத்துள்ளார். குஜராத் வழக்கு கெடுபிடி அதிகரித்ததால் கடந்த ஆண்டு டிசம்பரில் நித்தி, அவரது சிஷ்யைகள், சீடர்கள் நேபாளம் வழியாக வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

டிரினிடாட் அண்ட் டொபாகோ அல்லது ஈகுவடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி புதிய நாட்டை நித்தி உருவாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அந்த நாட்டுக்கு கைலாசா என்று பெயரிட்டு அதற்கான கொடியையும் அண்மையில் அவர் வெளியிட்டார். அந்த நாடு குறித்த அனைத்து தகவல்களும் www.kailaasa.org இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதியில் வழிபாடு நடத்திய நித்தி.
சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதியில் வழிபாடு நடத்திய நித்தி.

உலகம் எங்கும் வாழும் இந்துக்களுக்காகவும் சனாதன தர்மத்தை காப்பாற்றவும் புதிய நாடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் இந்துக்கள் குடியேறலாம் என்று நித்தி அழைப்பு விடுத்துள்ளார்.

தங்க நாணய கரன்ஸி

ஆங்கிலம், சம்ஸ்கிருதம், தமிழ் ஆகியவை கைலாசா நாட்டின் ஆட்சி மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கைலாசா நாட்டுக்காக உள்துறை, பாதுகாப்பு, நிதி, வீட்டு வசதி, மனிதநேய சேவைகள், கல்வி உள்ளிட்ட துறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

புதிய கைலாசா நாட்டில் இருந்து நித்தியும் அவரது சீடர்களும் அவ்வப்போது வீடியோ வெளியிட்டு பரபரப்பை பற்ற வைத்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் தோன்றிய நித்தி, கைலாசா நாட்டுக்காக ரிசர்வ் வங்கி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று தங்க நாணயத்தில் கரன்ஸி வெளியிடப்படும் என்றும் அறிவித்தார்.

நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா.
நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா.

ஏற்கெனவே அறிவித்தபடி இன்று 5 வகையான தங்க நாணயங்களை நித்தி இன்று அறிமுகப்படுத்தினார். கைலாசாவின் நாணயங்கள் மூலம் 56 நாடுகளுடன் வர்த்தக உறவுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

11.66 கிராம் தங்கத்தில் நாணயம்

“கைலாசாவின் கரன்ஸிகள் தங்கத்தில் அச்சடிக்கப்படும். இந்த கரன்ஸிகள் சம்ஸ்கிருதத்தில் சொர்ணமுத்ரா என்றும் தமிழில் பொற்காசு என்றும் ஆங்கிலத்தில் டாலர் என்றும் அழைக்கப்படும்.

புதிய கரன்ஸிகள் 1 காசு, 2 காசு, 3 காசு, 4 காசு, 5 காசு மதிப்பீடுகளைக் கொண்டு அச்சடிக்கப்படும். ஒரு டாலரில் 11.66 கிராம் தங்கம் இருக்கும்.

வேதம், ஆகம விதிகளை பின்பற்றி கைலாசாவின் பொருளாதார கொள்கைகள் இருக்கும்” என்று நித்தி விளக்கம் அளித்துள்ளார்.

புதிய கரன்ஸிகளை நித்யானந்தா வெளியிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பேஸ்புக், ட்விட்டர் சமூக வலைதளங்களில் வெளியிடப்படப்பட்டுள்ளன. இன்று தேசிய அளவில் நித்தி டிரெண்டிங் ஆகியுள்ளார்.

40 லட்சம் பேர் விருப்பம்

நித்தியின் புகழை பரப்பும் வகையில் www.nithyananda.org என்ற பெயரில் தனி இணையதளம் செயல்படுகிறது. அந்த இணையத்தில் நுழைந்தவுடன் ஆன்லைனில் சேட்டிங் செய்ய அழைப்பு விடுக்கப்படுகிறது.

கைலாசா நாட்டில் குடியேறுவதற்காக இந்த இணையத்தின் ஆன்லைன் சேட்டிங் வழியாக ஆயிரக்கணக்கானோர் விவரங்களை கேட்டறிவதாகக் கூறப்படுகிறது.

நித்தி அண்மையில் வெளியிட்ட வீடியோவில் சுமார் 40 லட்சம் பேர் கைலாசாவில் குடியேற விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

புதிய நாடு எப்படி?

இத்தாலி தலைநகர் ரோமை ஒட்டியுள்ள நகரம் வாடிகன். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமைபீடமான இந்த நகரம் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நாட்டின் தலைவர் போப்பாண்டவர். அவர் எந்த நாட்டுக்கு சென்றாலும் ஒரு நாட்டின் தலைவருக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும்.

இதேபாணியில்தான் நித்தி தனது புதிய நாட்டை உருவாக்கி உள்ளார். உலகின் ஒரே இந்து நாடாக அறியப்பட்ட நேபாளம் கடந்த 2008-ல் தனது அடையாளத்தை மாற்றியது.

மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அரசியல் இயக்கமாக மாறியதால் நேபாளத்தில் மன்னராட்சி நடைமுறை அகற்றப்பட்டு இந்து நாடு அடையாளம் அகற்றப்பட்டது.

எனவே தற்போது உலகின் ஒரே இந்து நாடு ‘கைலாசா’ மட்டுமே என்று நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.

நித்தி எங்கிருக்கிறார் என்பது இன்றுவரை மர்மமாக உள்ளது. மத்திய அரசால்கூட அவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டறிய முடியவில்லை.

எனினும் புதிய நாடான கைலாசாவில் குடியேற விரும்புவோர், நித்தி.. நீ எங்கய்ய இருக்க…. என்று ஏக்கத்துடன் குரல் கொடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *