பிஹார் தேர்தல்.. 3-வது இடத்துக்கு தள்ளப்பட்ட நிதிஷ்…

பிஹார் தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமாரின் கட்சி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி இணைந்து போட்டியிட்டது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் 115 தொகுதிகளிலும் பாஜக 110 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஆளும் கூட்டணியில் அங்கும் வகிக்கும் விகாஸ்சீல் இன்சான் கட்சி 11, முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 7 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமார் முன்னிறுத்தப்பட்டார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன சக்தி ஆரம்பம் முதலே நிதிஷ் குமாருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியது. பிஹார் தேர்தலில் அந்த கட்சி தனித்துப் போட்டியிட்டது. 136 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே லோக் ஜன சக்தி போட்டியிட்டது. பாஜக போட்டியிடும் தொகுதிகளில் வேட்டாளர்களை நிறுத்தவில்லை.    

“தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்போம். ஆனால் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைக்கமாட்டோம்” என்று லோக் ஜன சக்தி தலைவர் சிராக் பாஸ்வான் கூறி வருகிறார்.

ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்ட 115 தொகுதிகளில் அந்த கட்சி பாதிக்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே முன்னணியில் உள்ளது. கருத்து கணிப்புகளை பொய்யாக்கி பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதற்கு அடுத்து எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் 2-வது இடத்தில் உள்ளது. 

முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 3-வது தள்ளப்பட்டுள்ளது.  லோக் ஜன சக்தி வாக்குகளைப் பிரித்ததால் நிதிஷ் குமாரின் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஒருவேளை லோக் ஜன சக்தி எதிர்த்து போட்டியிடாமல் இருந்தால் ஐக்கிய ஜனதா தளம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நிதிஷ் குமாரின் முன்னாள் நெருங்கிய நண்பர் பவன் வர்மா கூறும்போது, “நிதிஷ் குமாரின் கட்சி பலத்தை குறைக்க பாஜக திட்டமிட்டிருந்தது. சிராக் பாஸ்வான் மூலம் பாஜகவின் குறிக்கோள் நிறைவேறிவிட்டது” என்று தெரிவித்தார்.

கடந்த 2010-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக பதவி வகித்தார். அப்போது பாட்னாவில் நடந்த விருந்தில் மோடி பங்கேற்றார். அவரை தவிர்ப்பதற்காக நிதிஷ் குமார் விருந்தினை புறக்கணித்தார். இப்போது  பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.  பாஜக தயவு இருந்தால் மட்டுமே நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்க முடியும். இந்த சூழ்நிலையில் நிதிஷ் குமார் என்ன முடிவு எடுப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *