பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் இன்று பதவியேற்றார்.
பிஹார் சட்டப்பேரவை தேர்தல் கடந்த அக். 28, நவ.3, 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற்றது. கடந்த 10-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.
பாஜக, ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. எதிரணியான ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணிக்கு 110 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன.
பிஹார் தலைநகர் பாட்னாவில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. இதில், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று மாலை அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
பதவியேற்பு விழா
இதைத் தொடர்ந்து பாட்னாவில் இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. தற்போதைய முதல்வர் நிதிஷ் குமார் 7-வது முறையாக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பாகு சவுகான் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பாஜக மூத்த தலைவர்கள் தர்கிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகியோர் துணை முதல்வர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த விஜய் குமார் சவுத்ரி, விஜேந்திர பிரசாத் யாதவ், அசோக் குமார் சவுத்ரி, மேவா லால் சவுத்ரி, ஷீலா மண்டல் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். முதல்வர் நிதிஷ்குமார் உட்பட அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 6 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
பாஜகவை சேர்ந்த மங்கள் பாண்டே, அமரேந்திர பிரதாப் சிங், ராம்பிரித் பாஸ்வான், ஜிவேஸ் மிஸ்ரா, ராம் சூரத் ராய் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். 2 துணை முதல்வர்கள் உட்பட அமைச்சரவையில் பாஜகவுக்கு 7 இடங்கள் அளிக்கப்பட்டிருக்கிறது.
சிறிய கட்சிகளுக்கு இடம்
முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாமி மோர்ச்சாவுக்கு அமைச்சரவையில் ஓரிடம் ஒதுக்கப்பட்டது. இதன்படி ஜிதன்ராம் மாஞ்சியின் மகன் சந்தோஷ் மாஞ்சி கேபினட் அமைச்சராகப் பதவியேற்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விகாஸ்சீல் இன்சான் கட்சிக்கு அமைச்சரவையில் ஓரிடம் அளிக்கப்பட்டது. அந்த கட்சியின் தலைவர் முகேஷ் சகானி கேபினட் அமைச்சராக பதவியேற்று கொண்டார். முதல்வர் நிதிஷ் குமாரையும் சேர்த்து பிஹார் அமைச்சரவையில் 15 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கான இலாகாக்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடிக்கு இந்த முறை துணை முதல்வர் பதவி வழங்கப்படவில்லை. அவர் மத்திய அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், ” பிஹார் முதல்வராகப் பதவியேற்றுள்ள நிதிஷ் குமாருக்கு வாழ்த்துகள். புதிய அமைச்சர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பிஹாரின் வளர்ச்சிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பம் ஒன்றிணைந்து பாடுபடும். பிஹார் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும்” என்று உறுதியளித்துள்ளார்.