இந்திய எல்லையில் படைகளை குவிக்கவில்லை பாகிஸ்தான் ராணுவம் விளக்கம்

கடந்த இரு மாதங்களாக லடாக் எல்லையில் சீன வீரர்கள் அவ்வப்போது அத்துமீறுவதால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் மிக நெருங்கிய நட்பு நாடு பாகிஸ்தான். எனவே, சீனாவுக்கு ஆதரவாக இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் வீரர்களை குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் முகாமிட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன.


இந்த தகவலை பாகிஸ்தான் ராணுவம் மறுத்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின் ராணுவ மூத்த அதிகாரி பாபர் கூறுகையில், “இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவ தரப்பில் வீரர்கள் குவிக்கப்படவில்லை. இதேபோல எங்களது விமான தளத்தை சீன போர் விமானங்கள் பயன்படுத்துவதாக வெளியான தகவல்களும் வதந்தி. இதுபோன்ற பொய் செய்திகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.


சீனாவின் கனவு திட்டமான ‘பட்டுப்பாதையில்’ அந்த நாட்டின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இருந்து பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்துக்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பாகிஸ்தானுக்கு செல்கிறது.
இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் இருந்து 8 கி.மீ. தொலைவிலேயே பட்டுப்பாதை நெடுஞ்சாலை உள்ளது. எதிர்காலத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி இந்தியாவின் வசமானால் சீனாவின் பல லட்சம் கோடி பட்டுப்பாதை திட்டம் மண்ணாகிவிடும்.


எனவே கிழக்கு லடாக்கில் இந்தியாவுக்கு சீனா குடைச்சல் கொடுக்கிறது. இந்த விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக வாலாட்டும் பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக குரைத்து வருகிறது. இந்தியாவின் ராணுவ பலம் மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இந்தியா மீது காட்டும் பாசத்தால் சீனாவும் பாகிஸ்தானும் செய்வதறியாது திகைக்கின்றன. இந்தியா, சீனா விவகாரத்தில் ரஷ்யா எந்த பக்கமும் சாயாமல் நடுநிலை வகிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *