ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க செப்டம்பர் 21 முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படுகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகள் ஆன்லைன் வாயிலாக பாடம் நடத்தி வருகின்றன.
ஆன்லைன் வாயிலாக பாடங்கள் கற்பிக்கப்படுவதால் மாணவ, மாணவியரின் கண் பார்வை பாதிக்கப்படுகிறது. உடல் நலம், மன நலம் பாதிக்கப்படுகிறது.
எனவே ஆன்லைன் கல்விக்கு தடை விதிக்க வேண்டும் என்று சரண்யா, விமல், பரணீஸ்வரன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு இன்று காலை தீர்ப்பு வழங்கியது.
அப்போது ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.எனினும் சில வழிகாட்டு நெறிகளை நீதிபதிகள் வழங்கினர்.
ஆன்லைன் வகுப்பு நேரத்தை முறையாகப் பின்பற்ற வேண்டும். ஆன்லைன் வகுப்பு தொடர்பான மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல் நெறிகளைப் பின்பற்ற வேண்டும்.
இதனை மீறும் பள்ளி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட தலைமையகத்தில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்று நீதிபதிகள் கண்டிப்புடன் உத்தரவிட்டனர்.
இதனிடையே ஈரோடு மாவட்டம், கோபி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று தொடங்கிவைத்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
“மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் செப்டம்பர் 21-ம் தேதி முதல் 5 நாள்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படுகிறது.
இந்த உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்த பிறகே பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்” என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.