உயிரிழந்த தொழிலாளர் குறித்த புள்ளிவிவரம் இல்லை…

உயிரிழந்த தொழிலாளர் குறித்த புள்ளிவிவரம் இல்லை… என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. கடந்த மே 1-ம் தேதி வரை 4 கட்டங்களாக 68 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

அப்போது டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களில் பணியாற்றிய புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையிழந்து வருமானம் இன்றி தவித்தனர். அவர்கள் நடைபயணமாக சொந்த மாநிலங்களுக்கு திரும்பினர்.

மகாராஷ்டிராவில் ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற தொழிலாளர்கள் சரக்கு ரயில் மோதி உயிரிழந்தனர். பல்வேறு மாநிலங்களில் சரக்கு வாகனங்களில் சென்ற தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். நடைபயணமாக சென்றவர்களில் பலர் பசி, பட்டினியால் உயிரிழந்தனர்.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், ஊரடங்கின்போது புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர், அவர்களுக்கு மத்திய அரசு என்னென்ன உதவிகளை வழங்கியது என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் எழுத்துபூர்வமாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் நேற்று எழுத்துபூர்வமாக பதில் அளித்தார்.
“கரோனா ஊரடங்கு காலத்தில் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த புள்ளிவிவரங்கள் மத்திய அரசிடம் இல்லை.

எனவே நிவாரணம் வழங்கப்படுவது குறித்த கேள்வி எழவில்லை.
ஊரடங்கின்போது சுமார் ஒரு கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பினர். அவர்களுக்கு தேவையான உதவிகளை அந்தந்த மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சுகாதாரத் துறை நிபுணர்கள், துப்புரவு தொழிலாளர்கள், அரசு சாரா அமைப்புகள் இணைந்து கரோனா ஊரடங்கின்போது எழுந்த மனிதாபிமான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டன” என்று மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் சர்ச்சை பதிலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள அமைச்சர் தாமஸ் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசுக்கு தொழிலாளர்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *