வங்கிக் கடனுக்கு இனிமேல் சலுகை கிடையாது… என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல் செய்யப்பட்டதால் நாடு முழுவதும் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. பல லட்சம் பேர் வேலையிழந்தனர்.
இதை கருத்தில் கொண்டு வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களுக்கு தவணை செலுத்த 6 மாதங்கள் விலக்கு அளிக்கப்பட்டது. இந்த கால அவகாசம் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
மேலும் கொரோனா காலத்தில் செலுத்தாத தவணைக்காக வட்டி மீது விதிக்கப்பட்ட வட்டியையும் ரிசர்வ் வங்கி ரத்து செய்தது.
இந்நிலையில் வங்கிக் கடன் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கடன் தவணை, வட்டி சலுகையை வரும் மார்ச் மாதம் வரை நீட்டிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதாரம் தேக்க நிலையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் வங்கிக் கடன் தவணை செலுத்த, வட்டி சலுகை அளிப்பது மிகவும் கடினம். இனிமேல் சலுகை அளிக்க முடியாது” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் நீதிபதிகள் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 2-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.