பொது இடங்களை ஆக்கிரமித்து போராட்டம் நடத்தக்கூடாது என்று ஷாகின் பாக் வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) கடந்த டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், ஜெயின் மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை முஸ்லிம் நாடுகள் என்பதால் சிஏஏ சட்டத்தில் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.
எனினும் இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. தலைநகர் டெல்லியில் கடந்த டிசம்பர் 14-ம் தேதி சுமார் 50 பெண்கள், ஷாகின் பாக் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
கடந்த மார்ச் 24-ம் தேதி வரை 101 நாட்கள் இந்த போராட்டம் நீடித்தது. கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊடரங்கு அமல் செய்யப்பட்டதால் ஷாகின் பாக் போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஷாகின் பாக்கில் போராட்டம் நடைபெற்றபோது நொய்டா-காளந்தி குஞ்ச்-மதுரா சாலையில் போக்குவரத்து முடங்கியது. தெற்கு டெல்லி- நொய்டா பகுதிகள் துண்டிக்கப்பட்டன.
அலுவலகம், பள்ளி, கல்லூரி, அன்றாட அலுவல்களுக்கு செல்வோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
சிஏஏ விவகாரத்தால் கடந்த பிப்ரவரியில் டெல்லியில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இதில் 53 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனிடையே ஷாகின் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்று கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
ஷாகின் பாக் போராட்டத்துக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுத்துவிட்டது. இதை எதிர்த்து கடந்த பிப்ரவரி தொடக்கத்தில் பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், அனிருத்தா போஸ், கிருஷ்ண முராரி அமர்வு விசாரித்தது.
போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த, சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரனை மத்தியஸ்தர்களாக சுப்ரீம் கோர்ட் நியமித்தது.
அவர்கள் போராட்டக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடந்த பிப்ரவரி இறுதியில் சீலிட்ட உறையில் அறிக்கை தாக்கல் செய்தனர். டெல்லி கலவரம், கரோனா வைரஸ் ஊரடங்கால் வழக்கு விசாரணை தடைபட்டது.
சுப்ரீம் கோர்ட் செயல்படத் தொடங்கியதும் ஷாகின் பாக் வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது. அனைத்து தரப்பு விசாரணையும் கடந்த மாதம் 21-ம் தேதியுடன் நிறைவு பெற்ற நிலையில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பு வழங்கினர்.
“போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. இதனை அரசமைப்பு சாசனம் உறுதி செய்கிறது. எனினும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் போராட்டம் நடத்த வேண்டும்.
பொது இடங்களை, சாலைகளை காலவரையின்றி ஆக்கிரமிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
யாருக்கும் இடையூறு இல்லாத வகையில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் போராட்டம் நடத்தலாம்.
சாலைகளை யார் ஆக்கிரமித்தாலும் சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகங்கள், அவர்களை வெளியேற்ற வேண்டும்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதுபோன்ற விவகாரங்களில் நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்கக் கூடாது. அரசு நிர்வாகங்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஷாகின் பாக் போராட்ட குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய மத்தியஸ்தர் குழு அளித்துள்ள அறிக்கையில், அந்த போராட்ட குழுவுக்கு தலைமை இல்லை.
இதன்காரணமாகவே குழப்பங்கள் ஏற்படுகின்றன என்று தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்கள் போராட்டகளங்களை, போர்க்களங்களாக மாற்றுகின்றன. ஷாகின் பாக் போராட்டத்தில் இதை கண்கூடாக கண்டோம்” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.