மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி-க்கு 50% இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ இளநிலை படிப்புகளில் இருந்து 15% இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் இருந்து 50% இடங்களும் அகில இந்திய ஒதுக்கீடு என்ற வகையில் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன.
இந்த இடங்களில் 50 சதவீதத்தை ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடாக வழங்க உத்தரவிடக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் அதிமுக, திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.
இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சென்னை ஐகோர்ட்டை அணுகும்படி உத்தரவிட்டது, இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த சென்னை ஐகோர்ட், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கும்படி உத்தரவிட்டது. மேலும், இது பற்றிய சட்ட வரையறைகளை 3 மாதங்களில் உருவாக்கும்படியும், அதற்காக சிறப்பு குழுவை அமைக்கும்படியும் உத்தரவிட்டது.
இந்த இடஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த உத்தரவிடக் கோரி, தமிழக அரசு, அதிமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ஓபிசி இடஒதுக்கீடு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் நடப்பாண்டில் இடஒதுக்கீடு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.