2 நிபுணர்களுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த சுவீடன் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, கடந்த 1901-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய 6 பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இதில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு உரியவரை நார்வே நோபல் கமிட்டி தேர்வு செய்கிறது. இதர 5 பிரிவுகளின் நோபல் பரிசுக்கு உரியவர்களை சுவீடன் அமைப்புகள் தேர்வு செய்கின்றன.
ஏற்கெனவே 5 பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள் கடந்த திங்கள் முதல் வெள்ளி வரை அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பால்.ஆர் மில்க்ரோம், ராபர்ட் வில்சன் ஆகியோருக்கு இன்று அறிவிக்கப்பட்டது.
ஏல கோட்பாட்டின் மேம்பாடு, ஏலத்துக்கான வடிவமைப்பு ஆகியவற்றை உருவாக்கியதற்காக இருவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.