3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு

அமெரிக்கா, பிரிட்டனை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த சுவீடன் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, கடந்த 1901-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய 6 பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 

இதில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு உரியவரை நார்வே நோபல் கமிட்டி தேர்வு செய்கிறது. இதர 5 பிரிவுகளின் நோபல் பரிசுக்கு உரியவர்களை ராயல் சுவீடிஷ் அகாடமி ஆப் சயின்சஸ் தேர்வு செய்கிறது. 

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், அக்டோபர் 5-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை அடுத்தடுத்து அறிவிக்கப்பட உள்ளனர். 

முதல்கட்டமாக மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. 

மருத்துவ நோபல் பரிசு கமிட்டியின் பொதுச் செயலாளர் தாமஸ் பெர்ல்மேன், ஸ்டாஸ்ஹோமில் நேற்று கூறும்போது, “2020-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள்  ஹார்வி ஜேம்ஸ் ஆல்டர் (85), 

சார்லஸ் ரைஸ் (68) மற்றும் பிரிட்டனை சேர்ந்த மைக்கேல் ஹாட்டனுக்கு (70) வழங்கப்படுகிறது. ஹெபடைட்டிஸ் சி வைரஸை கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

ஹெபடைட்டிஸ் வைரஸ் ஆராய்ச்சி

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 7 கோடிக்கும் மேற்பட்டோர் ஹெபடைட்டிஸ் வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 4 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. 

பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளின் பலனாக கடந்த 1960-களில் ஹெபடைட்டிஸ் ஏ, பி வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன.  இது பெரும் சாதனையாக கருதப்பட்டது.

ஆனால் அதன்பிறகும் பெரும்பாலானோர் புதிய வகை ஹைபடைட்டிஸ் வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். கடந்த 1980-களில் விஞ்ஞானிகள் ஹார்வி ஜேம்ஸ் ஆல்டர், சார்லஸ் ரைஸ், மைக்கேல் ஹாட்டன் ஆகியோர் ஹெபடைட்டிஸ் சி வைரஸை கண்டுபிடித்தனர்.

இதன்மூலம் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன.  இதற்காகவே 3 பேரும் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

யார் இவர்கள்?

அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி ஹார்வி ஜேம்ஸ் ஆல்டர், அந்த நாட்டின் மேரிலேண்ட் மாகாணம், பெதஸ்தா நகரில் உள்ள தேசிய சுகாதார இன்ஸ்டிடியூட்டில் பணியாற்றி வருகிறார். அமெரிக்க அரசின் பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த மற்றொரு விஞ்ஞானி சார்லஸ் ரைஸ், அந்த நாட்டின் நியூயார்க் நகரில் உள்ள ராக்பெல்லர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானி மைக்கேல் ஹாட்டன், தற்போது கனடா நாட்டின் எட்மண்டன் நகரில் உள்ள ஆல்பர்டா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர்கள் 3 பேருக்கும் தங்க முலாம் பூசப்பட்ட பதக்கம், பாராட்டு உரையுடன் கூடிய பட்டயம் மற்றும் ரூ.8 கோடி ரொக்கம் பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.

இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு

இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ளது. நாளை வேதியியல், நாளை மறுநாள் இலக்கியம், 9-ம் தேதி அமைதி, 12-ம் தேதி பொருளாதாரம் ஆகிய பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஆல்பர்ட் நோபலின் நினைவு நாளில் (டிசம்பர் 10) சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் நோபல் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். 

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு காணொலி வாயிலாக விழா நடைபெற உள்ளது. நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அவரவர் நாட்டில் இருந்து விழாவில் பங்கேற்க உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *