என்னை மன்னித்து விடுங்கள்.. கண்கலங்கிய வடகொரிய அதிபர்…

வடகொரியாவின் ராணுவ அணிவகுப்பில் அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங் உன், கண்கலங்கி அழுதார். ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என்று மக்களிடம் உருக்கமாக மன்றாடினார்.

வடகொரியாவில் தொழிலாளர் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. அந்த கட்சியின் 75-வது ஆண்டு விழாவை ஒட்டி கடந்த 11-ம் தேதி தலைநகர் பியாங்யாங்கில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இதில் அதிபர் கிம் ஜோங் உன் பங்கேற்று உரையாற்றினார். 

வழக்கமாக வடகொரிய ராணுவ அணிவகுப்பு பகலில் நடைபெறும். இந்த முறை நள்ளிரவில் அணிவகுப்பு நடத்தப்பட்டது. அதிபர் கிம் ஜோங் உன் ராணுவ அணிவகுப்புகளில் ஆவேசமாக பேசுவது வழக்கம். இந்த முறை அவர் அமைதியாக, ஆரவாரமின்றி பேசினார். 

கண்ணீரை துடைத்தார்

“வடகொரிய மக்கள் என் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களின் நம்பிக்கை வானத்தைவிட உயரமானது, கடலைவிட ஆழமானது. 

ஆனால் மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையை உறுதி செய்வதில் நான் தோல்வி அடைந்திருக்கிறேன். அதற்காக எனது மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன். 

மக்களின் துன்பங்களை துடைப்பதில் எனது முயற்சி போதுமானதாக இல்லை” என்று கூறிய அதிபர் கிம் மேடையிலேயே உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கி அழுதார். 

மூக்கு கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீரை, கைகளால் துடைத்தார். அப்போது ராணுவ வீரர்கள், அரங்கில் குழுமியிருந்த மக்கள்  தேசப்பற்றோடு உரக்க குரல் எழுப்பினர்.

வடகொரிய அதிபர் கிம் முதல்முறையாக பொது மேடையில் அழுதது அந்த நாட்டு மக்களை மட்டுமன்றி உலக அரங்கில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

உலக மக்களுக்கு வாழ்த்து

அதிபர் கிம் மேலும் பேசும்போது, “பொருளாதார தடை, கரோனா வைரஸ், இயற்கை சீற்றம் ஆகிய 3 மிகப்பெரிய சவால்களை வடகொரியா எதிர்கொண்டிருக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில் அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

ஆளும் கட்சி தொண்டர்கள், அரசு நிர்வாகம், ராணுவ வீரர்கள் மக்களின் துயரை துடைக்க அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும்.

கரோனா வைரஸ் காரணமாக உலக மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகி உள்ளனர். இந்த வைரஸின் பிடியில் இருந்து உலகம் விரைவில் மீளும் என்று நம்புகிறேன். 

உலக மக்கள் அனைவரும் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ எனது இதயத்தின் ஆழத்தில் இருந்து வாழ்த்துகிறேன்.

தெற்குப் பகுதி (தென்கொரியா) மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கரோனா வைரஸ் பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரும். 

அதன்பிறகு வடக்கு, தெற்குப் பகுதி கொரிய மக்கள் கைகோத்து நடக்கும் காலம் வரும். இது நிச்யமாக நடக்கும்” என்று அவர் கூறினார்.

வடகொரியாவில் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று அதிபர் கிம் தனது உரையில் பலமுறை கூறினார். 

ராணுவ அணிவகுப்பில் பங்கேற்ற அவரும், வீரர்களும் முகக்கவசம் அணியவில்லை. சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை. அனைவரும் அருகருகே நின்றனர்.

நாசகார ஏவுகணை

அணு ஆயுத விவகாரம் காரணமாக வடகொரியா மீது ஐ.நா. சபை கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனாவுடனான எல்லைப் பகுதிகளுக்கு வடகொரியா சீல் வைத்திருக்கிறது. 

இதனால் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு வடகொரியாவில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. கடந்த சில வாரங்களில் வடகொரியாவை அடுத்தடுத்து 3 புயல்கள் தாக்கின. 

இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொருட்சேதமும் உயிர்ச்சேதமும் ஏற்பட்டிருக்கிறது. இதையே வடகொரியா எதிர்கொண்டிருக்கும் 3 சவால்கள் என்று அதிபர் கிம் குறிப்பிட்டுள்ளார்.

ராணுவ அணிவகுப்பில் அவர், அன்பாகவும் பண்பாகவும் பெருந்தன்மையாகவும் பேசினார். 

அதேநேரம் அணிவகுப்பில் நாசகார பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்று வலம் வந்தது. இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது என்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் என்றும் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

வடகொரிய அதிபர் கிம் மனம் திருந்திவிட்டார் என்று ஒருதரப்பினரும், இல்லை அவர் முதலை கண்ணீர் வடிக்கிறார் என்று மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

சீனாவின் மிக நெருங்கிய நட்புநாடான வடகொரியாவை நம்ப முடியாது என்பதால் கிம்மின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *