கொரோனா காலக்கட்டத்தில் ரேஷன் கார்டுகள் அடிப்படையில் நிவாரண நிதி வழங்கப்பட்டது. அதோடு திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனால் ரேஷன் கார்டுகளில் குடும்பத் தலைவர் பெயரை மாற்ற இல்லதரசிகள் அதிகளவில் விண்ணப்பித்தனர்.
அதனால் டிஎன்பிடிஎஸ் என்ற இணையதளமே முடங்கியது. அதோடு மட்டுமல்லாமல் புதிய ரேஷன் கார்டுக்கு ஏராளமானவர்கள் விண்ணப்பித்தனர். முன்பு போல மாநகராட்சி பகுதி என்றால் உதவி ஆணையர் அலுவலகங்களுக்கும் மாவட்டங்கள் என்றால் தாலுகா அலுவலகங்களுக்கும் மக்கள் செல்லவேண்டியதில்லை.
இணையதள வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர், லேப்டாப், ஏன் ஸமார்ட் செல்போன் இருந்தால்கூட எளிதில் புதிய ரேஷன் கார்டை விண்ணப்பித்துவிடலாம். இந்த வசதி இல்லை என்றால் அரசு சேவை மையங்களில் கூட புதிய ரேசன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
புதிய ரேசன் கார்டு கேட்டு 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தனர். அதில் பெரும்பாலானவர்கள் சரியான ஆவணங்களை சமர்பிக்கப்படாமல் விண்ணப்பித்ததால் அவர்களின் விண்ணப்பங்கள் ரத்து செய்யப்பட்டன. ஏராளமான விண்ணப்பங்கள் ரத்து செய்யப்பட்டதால் மீண்டும் மீண்டும் புதிய விண்ணப்பங்கள் டிஎன்பிடிஎஸ் இணையதளம் மூலம் மக்கள் விண்ணப்பித்து வந்தனர்.
இதுகுறித்து பொது விநியோகத் துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்ததும் விண்ணப்பங்களை ரத்து செய்வதற்குப் பதிலாக விண்ணப்பிப்பவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கலாம் என முடிவு செய்தனர். அதன்படி டிஎன்பிடிஎஸ் என்ற இணையதளத்தில் மின்னணு அட்டை சேவைகள் என்ற வரிசையில் புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க, மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலை என்பதற்கு கீழே மறு பரிசீலனை விண்ணப்பம் என புதிய வசதி செயல்படுத்தப்பட்டிருக்கிறது.

மறு பரிசீலனை விண்ணப்பத்தின் நிலையில் கிளிக் செய்தால் குறிப்பு எண் கேட்கும். அதில் புதியதாக ரேசன் கார்டுக்கு விண்ணப்பித்தபோது உங்களின் செல்போன் நம்பருக்கு வந்த குறிப்பு எண்ணை பதிவு செய்ததும் அதில் விண்ணப்ப படிவத்தின் பரிசீலனைக்காக காரணங்களை நிவர்த்தி செய்தால் புதிய ரேசன் கார்டு கிடைக்கும்.

இதகுறித்து உணவு துறை அதிகாரிகளிடம் கேட்டபோது முன்பெல்லாம் ஆவணங்கள் சரியில்லை என்றதும் புதிய ரேசன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் ரத்து செய்யப்பட்டு விடும். அதற்கான தகவல் சம்பந்தப்பட்டவர்களின் செல்போனுக்கு எஸ்எம்எஸாக அனுப்பப்படும். டிஎன்பிடிஎஸ் என்ற இணையதளத்திலும் அந்த விவரங்களை பார்க்கலாம். தற்போது ரேசன் கார்டுக்கு அனுமதியளிக்கும் அதிகாரிகள், விண்ணப்பத்தை ரத்து செய்ய முடியாது.
அதற்காக இணையதளத்தில் மறு பரிசீலனை விண்ணப்பம் என்ற புதிய வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே என்னென்ன ஆவணங்கள் இல்லை என்பதை புதியதாக ரேசன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களின் செல்போன் நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்பியிருப்போம்.
அந்த ஆவணங்களை மறு பரிசீலனை விண்ணப்பத்தில் சேர்த்து பதிவு செய்தால் அதை ஆய்வு செய்து விட்டு புதிய ரேசன் கார்டுக்கு அனுமதி அளிக்கப்படும். புதிய ரேசன் கார்டு மட்டுமல்ல முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கம் ஆகியவற்றுக்கும் இந்த புதிய வசதி பயன்படுத்த முடியும் என்றனர்.