ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என்று தமிழக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு இணையாக ஆம்னி பஸ்களையும் இயக்க தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதற்கான முன்பதிவும் தொடங்கிவிட்டது. ஆனால் சில ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக தமிழக போக்குவரத்துத் துறை முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
“தீபாவளி பண்டிகை காலத்தில் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் 1800 425 6151என்ற கட்டணமில்லா தொலைபேசியில் பயணிகள் புகார் தெரிவிக்கலாம். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆம்னி பஸ்களின் விதிமீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன’ என்று தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.