கொரோனா.. ஒரே நாளில் 70,000 பேருக்கு தொற்று…

இந்தியாவில் கடந்த 7-ம் தேதி முதல் நாள்தோறும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது.

கடந்த 11-ம் தேதி மட்டும் 53,000 தொற்று பதிவானது. கடந்த 17, 18-ம் தேதிகளில் 60 ஆயிரத்துக்கு கீழ் வைரஸ் தொற்று குறைந்தது.

நேற்று மீண்டும் புதிய கொரோனா தொற்று 60 ஆயிரத்தை தாண்டியது. இன்று புதிய தொற்று 70 ஆயிரத்தை நெருங்கி அதிர்ச்சி அளித்துள்ளது.

69,651 பேருக்கு தொற்று

மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், நாடு முழுவதும் ஒரே நாளில் 69 ஆயிரத்து 651 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள கொரோனா மருத்துவமனை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது.
மும்பையில் உள்ள கொரோனா மருத்துவமனை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது.

இதன்மூலம் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 28 லட்சத்து 36 ஆயிரத்து 925 ஆக உயர்ந்துள்ளது. இதில் 20 லட்சத்து 96 ஆயிரத்து 664 பேர் குணமடைந்துள்ளனர். 6 லட்சத்து 86 ஆயிரத்து 395 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 977 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 53 ஆயிரத்து 866 ஆக உயர்ந்துள்ளது.

நாள்தோறும் 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதால் கடந்த 20 நாட்களில் மட்டும் 11 லட்சத்து 38 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் 13,165

மகாராஷ்டிர சுகாதார துறை நேற்று மாலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 13 ஆயிரத்து 165 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனைக்காக ஒரு பெண்ணிடம் சளி மாதிரி எடுக்கப்படுகிறது.
பரிசோதனைக்காக ஒரு பெண்ணிடம் சளி மாதிரி எடுக்கப்படுகிறது.

அந்த மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 28 ஆயிரத்து 642 ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திராவில் நேற்று 9 ஆயிரத்து 742 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 16 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

கர்நாடகாவில் புதிதாக 8 ஆயிரத்து 642 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு இரண்டரை லட்சம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 795 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் தமிழக ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 3 லட்சத்து 55 ஆயிரத்து 449 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் நேற்று 2 ஆயிரத்து 333 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு 50 ஆயிரத்து 231 ஆக உயர்ந்துள்ளது.

தலைநகர் டெல்லியில் நேற்று 1,398 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அங்கு ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 741 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 447 பேர் குணமடைந்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் 1.62 லட்சம் பேர், மேற்குவங்கத்தில் 1.22 லட்சம் பேர், பிஹாரில் ஒரு லட்சம் பேர், தெலங்கானாவில் 95 ஆயிரம் பேர், அசாமில் 82 ஆயிரம் பேர், குஜராத்தில் 80 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *