ஒரே நாளில் 4.12 லட்சம் பேருக்கு கொரோனா

ஒரே நாளில் 4.12 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மத்தியில் இந்தியாவில் கொரோனா 2-வது அலை தொடங்கியது. கடந்த சில வாரங்களாக வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த மே 1-ம் தேதி இந்தியாவில் முதல்முறையாக தினசரி தொற்று 4 லட்சத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது. கடந்த சில நாட்களாக  சற்று குறைந்திருந்த கொரோனா தொற்று மீண்டும் 4 லட்சத்தை தாண்டியது.

மத்திய சுகாதாரத் துறையின் இன்றைய புள்ளிவிவரத்தின்படி ஒரே நாளில் 4,12,262 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இந்தியாவில் பதிவான அதிகபட்ச தினசரி தொற்றாகும். இதுவரை 2.10 கோடி பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினசரி கொரோனா தொற்று அதிகமாக இருந்தாலும் குணமடைவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் 3.29 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 1.72 கோடி பேர் வைரஸில் இருந்து மீண்டுள்ளனர்.

நாடு முழுவதும்  மருத்துவமனைகள், கொரோனா மையங்கள், வீடுகளில் 35.66 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,980 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2.3 லட்சமாக அதிகரித்துள்ளது.  

மகாராஷ்டிராவில் 57,640 பேர், கர்நாடகாவில் 50,112 பேர், கேரளாவில் 41,953 பேர், உத்தர பிரதேசத்தில் 31,111 பேர், தமிழகத்தில் 23,310 பேர், ஆந்திராவில் 22,204 பேர்,  டெல்லியில் 20,960 பேர், மேற்குவங்கத்தில் 18,102 பேர், ராஜஸ்தானில் 16,815 பேர், ஹரியாணாவில் 15,416 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

நாட்டின் 12 மாநிலங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் 6.43 லட்சம் பேர், கர்நாடகாவில் 4.87 லட்சம் பேர், கேரளாவில் 3.76 லட்சம் பேர், உத்தர பிரதேசத்தில் 2.62 லட்சம் பேர், ராஜஸ்தானில் 1.96 லட்சம் பேர், ஆந்திராவில் 1.7 லட்சம் பேர்,  குஜராத்தில் 1.48 லட்சம் பேர், சத்தீஸ்கரில் 1.29 லட்சம் பேர், தமிழகத்தில் 1.28 லட்சம் பேர், மேற்குவங்கத்தில் 1.21 லட்சம் பேர், பிஹாரில் 1.13 லட்சம் பேர், ஹரியாணாவில் 1.13 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா நோயாளிகளில் 81 சதவீதம் பேர் இந்த 12 மாநிலங்களில் சிகிச்சை பெறுகின்றனர்.

“கடந்த ஒரு வார காலத்தில் சர்வதேச கொரோனா தொற்றில்  46 சதவீதம் இந்தியாவில் பதிவாகி உள்ளது. சர்வதேச உயிரிழப்பில் இந்தியாவில் 25 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர்” என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *