பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் வெங்காயம் ரூ.45-க்கு விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு அறிவித்துள்ளார்.
வெங்காயம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இதுதொடர்பாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்பின் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
“வெங்காய விளைச்சம் அதிகம் உள்ள மகாஷ்டிரா, கர்நாடகா, ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக வெங்காயத்து வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வை கட்டப்படுத்த முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி அக். 21 முதல் சென்னை மற்றும் தமிழகத்தின் இதர மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள், நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் ஒரு கிலோ வெங்காயம் ரூ.45-க்கு விற்கப்படும். தமிழகத்தின் இதர பகுதிகளில் அக். 22 முதல் வெங்காய விற்பனை தொடங்கப்படும்” என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.