ஒரே நேரத்தில் 2 திருநங்கைகளுடன் காதல் – கடற்படையில் வேலை எனக் கூறி ஏமாற்றிய இளைஞரின் பகீர் பின்னணி

சென்னையில் செல்போன் கடையில் வேலை பார்த்த தூத்துக்குடி இளைஞர், ஒரே நேரத்தில் 2 திருநங்கைகளைக் காதலித்துள்ளார். இளைஞரின் சுயரூபம் தெரிந்ததும் திருநங்கையில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இன்னொருவர் காவல் நிலையம் படியேறி இளைஞரை சிறைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

பண மோசடி

சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த திருநங்கை பாசானா என்கிற பிரியங்கா (35) . இவர் அமைந்தகரை காவல் நிலையத்தில் புழல் அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த முகம்மது உசேன் என்பவர் மீது கடந்த 17.2.2020-ல் பண மோசடி புகாரளித்தார். அந்த புகாரில், முகம்மது உசேனுக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவன் என்னை காதலிப்பதாகக் கூறினான். அடிக்கடி என்னுடைய செல்போனில் பேசுவான்.

அப்போது, என்னுடைய செல்போனில் உள்ள போன் பே என்ற செயலி மூலம் என்னுடைய வங்கி கணக்கிலிருந்த 1,30,000 ரூபாயை அவனுடைய வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளான். வங்கியிலிருந்து வரும் பேலன்ஸ் தொடர்பாக மெசேஜ்களையும் அழித்துள்ளான்.

மேலும், என்னுடைய குரு லத்திப் என்பவரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாயை முகம்மது உசேனுக்கு வாங்கிக் கொடுத்தேன். அந்தப் பணத்தையும் அவன் திரும்பி தரவில்லை. எனவே என்னை ஏமாற்றிய முகம்மது உசேன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

யுவஸ்ரீ என்ற பாத்திமா

யுவஸ்ரீயுடன் காதல்


தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை யுவஸ்ரீ என்ற பாத்திமாவுடன் முகம்மது உசேனுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் நட்பாக பழகியுள்ளனர். அவரையும் முகம்மது உசேன் காதலிப்பதாகக் கூறியுள்ளார். முகம்மது உசேனின் சுயரூபம் தெரிந்த பாத்திமா, சில தினங்களுக்கு முன் தூத்துக்குடியில் தீக்குளித்தார்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், 3.7.2020-ல் உயிரிழந்தார். அதனால் அமைந்தகரை காவல் நிலையத்தின் முன் திருநங்கைகள் திரண்டனர். அவர்களிடம் அண்ணாநகர் காவல் உதவி ஆணையாளர் பாலமுருகன் மற்றும் அமைந்தகரை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது முகம்மது உசேன் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பிறகே திருநங்கைகள் கலைந்துச் சென்றனர்.

முகம்மது உசேன் கைது

முகம்மது உசேன்


முகம்மது உசேன் எங்கு இருக்கிறார் என்று போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் ஊரடங்கு காரணமாக தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மா நகரத்தில் தங்கியிருக்கும் தகவல் கிடைத்தது.

உடனே இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பகவதி, தலைமைக் காவலர்கள் கோபாலகிருஷ்ணன், மூர்த்தி, மனோஜ் ஆகியோர் தூத்துக்குடி பேட்மா நகரத்துக்கு காரில் சென்றனர். அங்கிருந்த முகம்மது உசேனைப் பிடித்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் திருநங்கைகளிடம் பணம் வாங்கியதை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் மீது மோசடி வழக்கைப் பதிவு செய்த போலீசார், கொரோனா பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கடற்படை


முகம்மது உசேன் குறித்து அமைந்தகரை போலீசார் கூறுகையில், பிரியங்காவிடம் விசாரித்தபோது நேவியில் (கடற்படையில்) பணியாற்றுவதாக முகம்மது உசேன் கூறியுள்ளார். மேலும் பிரியங்காவை நம்ப வைக்க கப்பல் படையினர் அணிந்திருக்கும் சீருடை அணிந்த புகைப்படத்தை முகநூலில் பதிவு செய்துள்ளார்.

அதனால்தான் பிரியங்கா, முகம்மது உசேனை முழுமையாக நம்பியுள்ளார். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய முகம்மது உசேன், பிரியங்காவிடமிருந்து லட்சக்கணக்கில் பணத்தை வாங்கியுள்ளார். பணத்தை வாங்கிய முகம்மது உசேன் செல்போன் நம்பரை மாற்றியுள்ளார். அதனால் பிரியங்காவால் முகம்மது உசேனை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஊரடங்கு காலக்கட்டம் என்பதால் சந்திக்கவும் முடியவில்லை.

செல்போன் கடை ஊழியர்

அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரியங்கா, காவல் நிலையத்தில் புகாரளித்தார். பிரியங்காவைத் தவிர அவருக்கு இன்னும் சில திருநங்கைகளுடன் பழக்கம் உள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த யுவஸ்ரீயின் தற்கொலைக்கும் முகம்மது உசேன்தான் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் முகம்மது உசேன், செல்போன் கடையில் வேலைப் பார்த்து வருகிறார். ஆனால் கடற்படையில் வேலைப்பார்ப்பதாகக் கூறி திருநங்கைகளை ஏமாற்றி வந்துள்ளார் என்றனர்.
ஒரே நேரத்தில் இரண்டு திருநங்கைகளுடன் பழகிய இளைஞர் முகம்மது உசேனிடம் முழுமையாக விசாரித்தால் இன்னும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *