அக். 1 முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் அமல் செய்யப்பட உள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக நாட்டின் எந்தவொரு மூலையில் உள்ள ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்க ஏதுவாக ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த திட்டம் 26 மாநிலங்களில் அமலில் உள்ளது.
தமிழகத்தில் வரும் 1-ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல் செய்யப்பட உள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னையில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மூத்த அமைச்சர்கள், உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
இத்திட்டத்துக்காக கடைகளுக்கு ஒதுக்க வேண்டிய கூடுதல் பொருட்கள், வெளிமாநில மக்களுக்கான கூடுதல் ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஆதார் அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது.
பிஓஎஸ் எனப்படும் விற்பனை முனைய இயந்திரங்களில் விரல் ரேகையை பதிவு செய்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். இனிமேல் ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே பொருட்களை வாங்க முடியும்.