ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் அமல் செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயரும் புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டம் தற்போது 26 மாநிலங்களில் அமலில் உள்ளது.
தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கிவைத்தார். இதன்மூலம் தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் ரேஷனில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.
இத்திட்டம் 32 மாவட்டங்களில் உடனடியாக அமலுக்கு வருகிறது. தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் வரும் 16-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
புதிய திட்டத்தின்படி ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே பொருட்களை வாங்க முடியும். அவர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்து பொருட்களை வாங்கலாம்.
ஒருவேளை விரல் ரேகை ஒப்பீட்டில் குளறுபடி ஏற்பட்டால் ஓடிபி முறையில் பொருட்களை பெறலாம். இதற்கு செல்போன் அவசியமாகும்.
வயது முதிர்ந்தவர்கள், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டோர் ரேஷன் கடைக்கு நேரில் வர வேண்டிய அவசியமில்லை. அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை செயல்படுத்த ரேஷன் கடைகளுக்கு 5 சதவீதம் கூடுதலாக உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.
வெளிமாநில மக்கள் பொருட்கள் வாங்கும்போது மத்திய அரசு நிர்ணயித்துள்ளபடி ஒரு கிலோ அரிசி ரூ.3, கோதுமை ரூ.2 வசூலிக்கப்படும்.