அக். 1 முதல் எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கலாம்

அக். 1 முதல் எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கலாம் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்புக்காக மாநிலம் விட்டு மாநிலத்துக்கு இடம்பெயரும் தொழிலாளர்களின் நலன் கருதி ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.

இதன் மூலம் நாட்டின் எந்த மூலையில் உள்ள ரேஷன் கடையிலும் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். தற்போது 26 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் உள்ளது.

தமிழகம், மேற்குவங்கம், அசாம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் மட்டும் இத்திட்டத்தை செயல்படுத்த தயக்கம் காட்டி வந்தன.

எனினும் மத்திய அரசின் அழுத்தத்தால் அனைத்து மாநிலங்களும் இத் திட்டத்தை செயல்படுத்த வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மாதம் 1-ம் தேதி ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இனிமேல் எந்த ரேஷன் கடையிலும் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். எனினும் இத்திட்டத்தின் நடைமுறை சிக்கல்கள் எவ்வாறு இருக்கும் என்பது தெரியவில்லை.

ரேஷன் அட்டைதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு தரப்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்று ரேஷன் கடைக்காரர் கூறுவதை அனைவரும் கேட்டிருப்போம்.

சில நாட்கள் தாமதமாக சென்றால்கூட பொருட்கள் தீர்ந்துவிட்டது என்று கடைக்காரர் கூறுவது வாடிக்கை.

இந்த சூழ்நிலையில் எந்தவொரு ரேஷன் கடைகளிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற திட்டம் எந்த அளவுக்கு வெற்றிகரமாக அமல் செய்யப்படும் என்பதை பொறுத்திருந்தே கணிக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *