கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசு, தனியார் பள்ளி நிர்வாகங்கள் ஆன்லைன், தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் ஒரு நாளில் எத்தனை மணி நேரம் ஆன்லைனில் வகுப்புகள் நடத்த வேண்டும் என்பது குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை விரிவான வழிகாட்டு நெறிகளை வெளியிட்டுள்ளது. அதன் சுருக்கம் வருமாறு:
பிரி கேஜி மாணவர்களுக்கு செல்போன், லேப்டாப் வழியே பாடம் நடத்துவதை தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு தொலைக்காட்சி, ரேடியோக்கள் வழியாக பாடம் நடத்த வேண்டும்.
எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளை நடத்தலாம். ஆனால் ஒரு நாளில் 30 நிமிடங்களுக்கு மேல் ஆன்லைனில் பாடம் நடத்தக்கூடாது.
1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு நாளில் 2 வகுப்புகள் நடத்தலாம். ஒவ்வொரு வகுப்பும் 45 நிமிடங்களுக்கு மேல் இருக்கக்கூடாது.
9 முதல் பிளஸ் 2 வரை ஒரு நாளில் 4 வகுப்புகள் நடத்தலாம். ஒவ்வொரு வகுப்பும் 30 முதல் 45 நிமிடங்கள் வரை மட்டுமே இருக்க வேண்டும்.