ஆன்லைன் வகுப்புக்கான நெறிமுறைகள் வரும் 15-ம் தேதிக்குள் வகுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. தனியார் பள்ளி நிர்வாகங்கள், ஆன்லைன் மூலம் மாணவ, மாணவியருக்கு கல்வி கற்பித்து வருகின்றன. ஆன்லைன் வகுப்பின்போது திடீரென ஆபாச படங்கள், வீடியோ ஒளிபரப்பாகிவிடுகிறது.
மேலும் பல மணி நேரம் ஆன்லைன் வகுப்பில் இணைந்திருந்தால் மாணவ, மாணவியரின் கண் பார்வை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தொடரப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புக்கான நெறிமுறைகளை வகுக்க வேண்டும். மாணவர்களின் வயதுக்கு ஏற்பட ஆன்லைன் பாட நேரத்தை வரையறுக்க வேண்டும் என்று அந்த மனுக்களில் கோரப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் கூறுகையில், வரும் 15-ம் தேதிக்குள் ஆன்லைன் வகுப்புகள் குறித்த விதிமுறைகள் வரையறுக்கப்படும்” என்று உறுதியளிக்கப்பட்டது.