ஆன்லைன் வகுப்புகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்..

ஆன்லைன் வகுப்புகளின் எண்ணிக்கையை குறைக்கலாம் என்று சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

அரசு, தனியார் பள்ளி நிர்வாகங்கள் ஆன்லைன், தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றன.

ஆன்லைன் நெறிகள்

இந்த சூழ்நிலையில் ஒரு நாளில் எத்தனை மணி நேரம் ஆன்லைனில் வகுப்புகள் நடத்த வேண்டும் என்பது குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை விரிவான வழிகாட்டு நெறிகளை வெளியிட்டுள்ளது.

“பிரி கேஜி மாணவர்களுக்கு செல்போன், லேப்டாப் வழியே பாடம் நடத்துவதை தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு தொலைக்காட்சி, ரேடியோக்கள் வழியாக பாடம் நடத்த வேண்டும்.

எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளை நடத்தலாம். ஆனால் ஒரு நாளில் 30 நிமிடங்களுக்கு மேல் பாடம் நடத்தக்கூடாது.

ஆன்லைன் வகுப்பு
ஆன்லைன் வகுப்பு

1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு நாளில் 2 வகுப்புகள் நடத்தலாம். ஒவ்வொரு வகுப்பும் 45 நிமிடங்களுக்கு மேல் இருக்கக்கூடாது.

9 முதல் பிளஸ் 2 வரை ஒரு நாளில் 4 வகுப்புகள் நடத்தலாம். ஒவ்வொரு வகுப்பும் 30 முதல் 45 நிமிடங்கள் வரை மட்டுமே இருக்க வேண்டும்” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஐகோர்ட்டில் வழக்கு

இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவ, மாணவியர் தொடர்ந்து கம்ப்யூட்டர்களை பார்ப்பதால் “கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்” என்ற நோய் பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது.

எனவே அரசு பள்ளிகளை போன்று தனியார் பள்ளிகளும் தொலைக்காட்சி வாயிலான கல்வி திட்டத்தை பின்பற்ற வேண்டும்” என்று வாதிட்டார்.

இறுதியில் நீதிபதிகள் கூறும்போது, மாணவர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க வகுப்புகளை குறைக்கலாம்.

வீட்டுப் பாடங்கள், பாடத்திட்டங்களையும் குறைக்கலாம் என்று யோசனை தெரிவித்தனர். வழக்கின் அடுத்த விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *