அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 3 தொலைக்காட்சி சேனல்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
வரும் 13-ம் தேதி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அறிவித்தார். இதனால் ஆசியர்கள், மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.
ஸ்மார்ட் போன் இல்லாமல் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது கடினம். பெரும்பாலான அரசு பள்ளி மாணவர்கள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களால் எப்படி ஸ்மார்ட்போன் வாங்க முடியும் என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், நம்பியூரில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் 3 தொலைக்காட்சி சேனல்கள் வாயிலாகவே அரசு பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும். இதற்கான பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. புதிய திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைப்பார். அதன்பிறகு முழுமையான விவரங்கள் தெரிவிக்கப்படும்.
பிளஸ் 2 தேர்வை 34 ஆயிரத்து 842 மாணவர்கள் எழுதவில்லை. இப்போதுவரை 718 மாணவர்கள் மட்டுமே மீண்டும் தேர்வெழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். அனைத்து மாணவர்களும் தேர்வெழுத வந்தாலும் ஏற்பாடுகள் செய்து தரப்படும்” என்று அமைச்சர் தெரிவித்தார்.