ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வாய்ப்புள்ளதா என்பது குறித்து அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் பலர் தற்கொலை செய்து வருகின்றனர். இதுதொடர்பான வழக்கை சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை கடந்த செவ்வாய்க்கிழமை விசாரித்தது. “ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வாய்ப்புள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி உத்தரவிட்டனர்.
ஆன்லைன் விளையாட்டு தொடர்பான விளம்பரங்களில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, சுதீப், நடிகை தமன்னா, கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, கங்குலி ஆகியோர் நடித்துள்ளனர். விளம்பரங்களில் நடிப்பவர்கள் தங்கள் பாக்கெட்டை நிரப்புவதில் மட்டுமே குறியாக உள்ளனர். இவர்கள் சொல்வதை கேட்டு இளைஞர்கள் நம்பி ஏமாறும் சூழ்நிலை உள்ளது. இந்த விவகாரம் குறித்து ஆன்லைன் விளம்பரங்களில் நடித்தவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.