எக்ஸ்பிரஸ் ரயில்களில் அனைத்து பெட்டிகளும் ஏசி மயம் ஆக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
ரயில்களில் அன் ரிசர்வ், ஸ்லீப்பர் கிளாஸ், ஏசி 3 டயர், ஏசி 2 டயர், ஏசி முதல் வகுப்பு, சேர் கார், செகண்ட் சீட்டர், எக்ஸ்கியூட்டிவ் சேர் கார், விஸ்டாடோம் கிளாஸ் ரூப் கோச் என பல்வேறு வகையான பெட்டிகள் உள்ளன.
இதில் ஏழைகள் அன் ரிசர்வ் பெட்டிகளிலும் நடுத்தர வர்க்க மக்கள் ஏசி வசதி இல்லாத ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகளில் முன்பதிவு செய்தும் பயணம் செய்து வருகின்றனர். ஒரு ரயிலில் ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகளே அதிகம் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த பின்னணியில் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் அனைத்து பெட்டிகளையும் ஏசி மயமாக்கும் திட்டத்தை ரயில்வே அமைச்சகம் தொடங்கியுள்ளது. இதுகுறித்து ரயில்வே வாரிய செய்தித் தொடர்பாளர் நாராயண் விளக்கம் அளித்துள்ளார்.
“மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லும் அனைத்து ரயில்களையும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்வே துறையை மேம்படுத்த இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஏசி வசதி அல்லாத ரயில்கள் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
ரயில்வே துறையின் புதிய திட்டம் குறித்து பல்வேறு தரப்பினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். அனைத்து பெட்டிகளும் ஏசி மயமாக்கினால் ரயில் டிக்கெட் கட்டணம் பன்மடங்கு அதிகரிக்கும். ஏழைகளின் ரயில் பயணம் எட்டாக்கனியாகிவிடும்.
வசதி படைத்தவர்கள் மட்டுமே ரயில் பயணம் செய்ய முடியும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.