வேளாண் மசோதாக்களுக்கு எதிராக ஜனாதிபதியிடம் மனு அளிக்க முடிவு

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக ஜனாதிபதியிடம் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் மசோதா, விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம், வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா மக்களவையில் கடந்த 17-ம் தேதி நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து இரு மசோதாக்களும் மாநிலங்களவையில் நேற்று கடும் அமளிக்கு நடுவே நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், தேசியவாத காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பாராளுமன்ற கூட்டத் தொடர் நேற்று தொடங்குவதற்கு முன்பாக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது வேளாண் மசோதாக்களுக்கு எதிராக ஜனாதிபதியிடம் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் விரிவான விளக்கம் அளித்தார்.

“வேளாண் மசோதாக்களில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. அந்த மசோதாக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி அவரிடம் மனு அளிக்க முடிவு செய்துள்ளோம்.

ராஜ்ய சபாவின் நேரம் மதியம் 1 மணிக்கு நிறைவடைந்துவிடும். அவை நேரம் முடிந்த பிறகு வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே இந்த மசோதாக்கள் செல்லாது.

வாக்குச்சீட்டு முறையில் வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதை ஏற்காமல் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த வகையில் மசோதாக்களுக்கு எதிராக சட்டரீதியாக போராட முடியும்.

அரசமைப்பு சாசனம் 111 விதியின்படி வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கக்கூடாது என்று ஜனாதிபதியிடம் வலியுறுத்துவோம்” என்று எதிர்க்கட்சி மூத்த தலைவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *