ஓபிஎஸ் X இபிஎஸ்.. அதிமுகவில் என்ன நடக்கிறது? ரவுண்ட் அப் ஸ்டோரி…

முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் இடையே அமைச்சர்கள் இன்று சமரசத்தில் ஈடுபட்டனர். அதிமுகவில் என்ன நடக்கிறது என்ற முழுமையான ரவுண்ட் அப் ஸ்டோரி.

தமிழகத்தின் இரும்பு பெண் என்று போற்றப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன.

ஜெயலலிதாவின் தோழி சசிகலா தலைமையில் ஓர் அணியும் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஓர் அணியும் உதயமாகின.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்றதும் காட்சிகள் மாறின. எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) ஓர் அணியாகவும் ஓ. பன்னீர் செல்வம் (ஓபிஎஸ்) தனி அணியாகவும் செயல்பட்டனர்.

இறுதியில் இரு அணிகளும் இணைந்தன. கட்சிக்கு ஓபிஎஸ், ஆட்சிக்கு இபிஎஸ் என்ற அடிப்படையில் உடன்பாடு எட்டப்பட்டது.
தற்போது அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்வி எழுந்து ஓபிஎஸ், இபிஎஸ் அணிகளுக்கு இடையே மோதல் எழுந்துள்ளது.

சென்னையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி.
சென்னையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி.


இந்த பின்னணியில் அடுத்த முதல்வர் ஓபிஎஸ்-தான் என்ற போஸ்டர்கள் தேனியில் ஒட்டப்பட்டு பரபரப்பை பற்றவைத்தன. அந்த சுவரொட்டிகளை சிலர் கிழித்து எறிந்ததால் பரபரப்பு பற்றி எரியத் தொடங்கியது.

இவ்விவகாரம் மூத்த அமைச்சர்களின் கவனத்துக்கு சென்றது.
இதைத் தொடர்ந்து செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயகுமார், காமராஜ், சம்முகம், ராஜு, விரமணீ உள்ளிட்ட 14 அமைச்சர்கள் தலைமைச் செயலகத்தில் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.

இதன்பின் 14 அமைச்சர்களும் கார்களில் அணிவகுத்து ஓ.பிஎஸ். வீட்டுக்கு சென்றனர். சுமார் ஒன்றரை மணி நேரம் அவருடன் ஆலோசனை நடத்தினர்.
இதன்பிறகு 14 அமைச்சர்களும் முதல்வர் பழனிசாமி வீட்டுக்கு சென்று அவருடன் கலந்தாலோசித்தனர்.

ஓபிஎஸ் கூறிய கருத்துகளை முதல்வரிடம் எடுத்துரைத்தனர்.
இதன்பிறகு பிற்பகலில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு சென்ற அமைச்சர்கள், முதல்வர் பழனிசாமி கூறிய கருத்துகளை அவரிடம் கூறினார். இதன்காரணமாக ஒட்டுமொத்த சென்னையும் இன்று பரபரப்பாக காணப்பட்டது.

தேனி மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அண்மையில் தொடங்கிவைத்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
தேனி மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அண்மையில் தொடங்கிவைத்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று மாலை ஓபிஎஸ், இபிஎஸ் பெயரில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மகத்தான மக்கள் இயக்கத்தின் உடன்பிறப்புகள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

இந்த இனிய நாள் நம் முன்னோர்களின் தியாகத்தாலும், உழைப்பாலும், தன்னலமற்ற தொண்டினாலும் மலர்ந்த பொன்னாளாகும்.
நாம் அனைவரும் ஒருதாய் மக்கள். “எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு, நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு” என்ற ஜனநாயகக் கொள்கையை நமக்கு வழங்கிய நாள் இந்த நாள்.

நம் நாடு பெற்ற சுதந்திரமும், அரசியல் சாசனம் தந்த மக்களாட்சித் தத்துவமும் ஏழை, எளிய, உழைக்கும் மக்களின் உயர்வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

ஒரு குடும்பத்தின் பிடியிலோ, ஒரு குறிப்பிட்ட குழுவின் கைகளிலோ, வலிமை பெற்றவர்களின் கரங்களிலோ இந்த மக்களாட்சி முடங்கிவிடக் கூடாது என்பதற்காக எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம் நமது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் மக்கள் இயக்கம்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து ஒட்டப்பட்ட போஸ்டர்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து ஒட்டப்பட்ட போஸ்டர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும், கழக ஆட்சியையும், எப்படி மாற்றாரும் பாராட்டும் வண்ணம் வழிநடத்தினோமோ அதைப் போலவே, இனிவரும் காலங்களிலும் சிறப்புற ஆட்சி நடத்தி மீண்டும் ஒரு தொடர் வெற்றியைப் பெற நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது.

கடந்த சில நாட்களாக கழக நிர்வாகிகளில் சிலர் எந்தப் பின்னணியும் இன்றி கூறிய சில கருத்துகள் மாற்றாருக்கு பெரும் விவாதப் பொருளாக மாறிவிட்டன.

அத்தகைய நிலை மீண்டும் ஏற்பட்டுவிடா வண்ணம் ஜெயலலிதா காலத்தில் இருந்ததைப் போன்று ராணுவ கட்டுப்பாட்டுடன் தலைமையின் முடிவுக்குக் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

கட்சியின் அனைத்து முக்கிய கொள்கை முடிவுகளையும், கூட்டணி குறித்த நிலைப்பாடுகளையும், ஜெயலலிதா காட்டிய வழியில் ஜனநாயக ரீதியில் கழகத்தின் தலைமை விரிவாக ஆலோசித்து, கழகத் தொண்டர்களின் மன உணர்வுகளை எதிரொலிக்கும் வகையில் சிறப்பான முடிவுகளை மேற்கொள்ளும்.

சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்வர் பழனிசாமி.
சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்வர் பழனிசாமி.

எனவே, சிறு சலசலப்புகளுக்கும் இடம் தராமல் நம்மை வீழ்த்த நினைப்போரின் பேராசைகளுக்கு வாய்ப்பளிக்காமல், ஒன்றுபட்டு உழைத்திட உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

கழக உடன்பிறப்புகள் மக்கள் பணிகளிலும், கழகப் பணிகளிலும் மட்டுமே கவனம் செலுத்துங்கள்.

கழகத்தை வெற்றிச் சிகரத்திற்கு இட்டுச்செல்ல உங்கள் பணிகள் மிகவும் இன்றியமையாதவை.
அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும், எந்தவித முன்யோசனையும் இன்றி, கழகத் தலைமையின் ஒப்புதல் இல்லாமல், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட இன்னபிற ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும், தங்களின் தனிப்பட்ட கருத்துகளைத் தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.கருத்துப் பரிமாற்றங்களை செய்வதன்மூலம் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை.

எனவே, ஊடக விவாதங்களில் கழக அரசின் சாதனைகளைப் பற்றியும், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக, கழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களைப் பற்றியும் எடுத்துச் சொல்லுங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *