ரேஷன் கடைகளில் விரல் ரேகை சரிபார்ப்பு மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. விரல் ரேகை சரிபார்ப்பு தோல்வியடையும்போது அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் மறுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக உணவு பொருள் வழங்கல் ஆணையர் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
விரல் ரேகை சரிபார்ப்பு தோல்வியடைந்தாலும் உண்மையான ரேஷன் அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும். விரல் ரேகை சரிபார்ப்பு இல்லாமல் விநியோகம் செய்யப்படும்போது பதிவேட்டில் பதிவு செய்து பொருள் பெற்றுச் செல்பவரின் கையொப்பத்தை பதிவு செய்ய வேண்டும். முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளிடம் ரேஷன் கடைகாரர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.
வயது முதிர்ந்த மாற்றுத் திறனாளிகள் கடைக்கு வர இயலாத நிலையில் அங்கீகரிக்கப்பட்ட நபர் வாயிலாக பொருள் பெற விரும்பி படிவம் பெற வந்தால் அவருக்கும் பொருட்களை கொடுக்க வேண்டும். அவரிடம் உரிய படிவத்தை கொடுத்து அனுப்ப வேண்டும். அடுத்தமுறை விண்ணப்ப படிவத்தை நிரப்பி ரேஷன் கடைகாரரிடம் கொடுக்க வேண்டும்.
இணைய பிரச்சினை ஏற்பட்டால் அந்த சிக்கல் சரியாகும்வரை இதர வழிமுறைகளின்படி ரேஷன் பொருட்களை விநியோகிக்க வேண்டும் என்று உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.