ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி சிறந்தது

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி மூலம், கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் முன்வரிசையில் உள்ளன.  இந்தியாவை பொறுத்தவரை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 தடுப்பூசிகளும் பிரிட்டன், ரஷ்யாவை சேர்ந்த தலா ஒரு தடுப்பூசியும் பரிசோதனை நிலையில் உள்ளன.  

ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோ டெக் நிறுவனத்தின் ‘கோவேக்ஸின்’, அகமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் கேடில்லா நிறுவனத்தின் ‘ஜைகோவ் டி’ ஆகியவை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளாகும்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசியை, மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த செரம் இன்ஸ்டிடியூட்  இந்தியாவில் பரிசோதனை செய்து வருகிறது. இதேபோல ரஷ்ய அரசு நிறுவனம் தயாரித்துள்ள ‘ஸ்புட்னிக் வி’ என்ற கரோனா தடுப்பூசியை ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபாரேட்டரீஸ் பரிசோதித்து வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த பைசர், ஜெர்மனியை சேர்ந்த பயோ என்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி விரைவில் சந்தைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடுப்பூசியை மைனஸ் 70 டிகிரி செல்சியஸில் மட்டுமே சேமித்து வைக்க முடியும். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கே இது கடினமானது. இந்தியா போன்ற நாடுகளில் சாத்தியம் இல்லாதது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியை மைனஸ் 2 முதல் மைனஸ் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் சேமித்து வைக்க முடியும். மேலும் வணிக நோக்கத்துக்காக தடுப்பூசியை விற்க மாட்டோம் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. எனவே அந்த பல்கலைக்கழக தடுப்பூசியை எதிர்பார்த்து உலக நாடுகள் காத்திருக்கின்றன.

இந்தியாவின் பாரத் பயோடெக்கின் கோவேக்ஸின் கரோனா தடுப்பூசி, அடுத்த ஆண்டின் 2-வது காலாண்டில்தான் விற்பனைக்கு வரும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது, ஏப்ரல் முதல் ஜூன் மாதத்தில்தான் தடுப்பூசி கிடைக்கும்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியை அடுத்த பிப்ரவரியிலேயே சந்தையில் அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்திய சந்தையில் கோவிஷீல்டு தடுப்பூசியே முதலில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பின்னணியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

“நாடு முழுவதும் 16 இடங்களில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியின் 2-வது, 3-வது கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. 3-வது கட்ட பரிசோதனைக்காக 1,600 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நடைமுறை கடந்த அக்டோபர் 31-ம் தேதியே நிறைவடைந்துவிட்டது.

கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனையில் சாதகமான முடிவுகள் கிடைத்து வருகின்றன.  இந்த தடுப்பூசி, கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு தீர்வு காண உதவும் என்று நம்புகிறோம். இந்தியாவில் பரிசோதனை செய்யப்படும் தடுப்பூசிகளில் கோவிஷீல்டு முன்வரிசையில் உள்ளது. இந்த தடுப்பூசி இந்திய சந்தையில் முதலில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கிறோம். அவசர கால அனுமதியின்பேரில் செரம் இன்ஸ்டிடியூட் ஏற்கெனவே  4 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை உற்பத்தி செய்துவிட்டது. 

மேலும் அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்தின் கோவாவேக்ஸ் கரோனா தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்ய அந்த நிறுவனத்துடன் செரம் இன்ஸ்டிடியூட்டும் ஐசிஎம்ஆர் அமைப்பும் கைகோத்துள்ளன. இதன்படி நோவாவேக்ஸின் நிறுவன தடுப்பூசியின் 3-வது கட்ட பரிசோசதனை  இந்தியாவில் விரைவில் நடைபெறும்”  என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தயாராகும் கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு மொத்தமாக கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு குறைந்த விலையில் அளிக்க உள்ளது. அந்தந்த மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு இலவசமாக போடுவதா அல்லது தடுப்பூசிக்கு விலை நிர்ணயிப்பதா என்பதை முடிவு செய்யலாம் என்று மத்திய சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகம், மத்திய பிரதேசம், பிஹார் உள்ளிட்ட மாநில அரசுகள் பொதுமக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படும் என்று முன்கூட்டியே அறிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *