பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26-ம் தேதி திறப்பு

பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26-ம் தேதி பக்தர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கேரளாவின் முக்கிய வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன.

தற்போது விதிமுறைகள் தளர்த்தப்பட்டிருப்பதால் வரும் 26-ம் தேதி பக்தர்களின் வழிபாட்டுக்காக திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் திறக்கப்பட உள்ளது.

எனினும் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பத்மநாபசுவாமி கோயில்.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பத்மநாபசுவாமி கோயில்.

“ஒரு நாளுக்கு முன்பாகவே கோயிலின் http://spst.in/இணையதளத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். அந்த ஆவணத்தையும் அசல் ஆதார் அட்டையும் கோயிலுக்கு எடுத்து செல்ல வேண்டும்.

பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கோயிலில் நுழைவதற்கு முன்பாக சோப்பு அல்லது சானிடைசரால் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். சமூக இடைவெளியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

காலை 8 மணி முதல் 11 மணி வரையும் மாலை 5 மணி முதல் 6.45 மணி வரை மட்டுமே கோயில் நடை திறந்திருக்கும். ஒரே நேரத்தில் 35 பக்தர்கள் மட்டுமே சன்னதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

நாளொன்றுக்கு அதிகபட்சமாக 665 பக்தர்கள் வழிபட மட்டுமே அனுமதி வழங்கப்படும்” என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவிதாங்கூர் அரச குடும்பம்

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பத்மநாப சுவாமி கோயில் 18-ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரால் கட்டப்பட்டது. இந்த கோயிலை மன்னர் குடும்பத்தினரே நிர்வகித்து வந்தனர்.

பத்மநாப சுவாமி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தங்க நாணயங்கள், ஆபரணங்கள்.
பத்மநாப சுவாமி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தங்க நாணயங்கள், ஆபரணங்கள்.

இந்நிலையில் பத்மநாப சுவாமி கோயிலை நிர்வகிக்கவும், சொத்துகளைப் பராமரிக்கவும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினருக்கு உரிமையில்லை என்று கடந்த 2011-ம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.

இதற்கு எதிராகத் தொடரப்பட்ட மனுவில் கடந்த ஜூலை 13-ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்கும் உரிமை திருவிதாங்கூர் அரச குடும்பத்திற்கு உள்ளது என சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் கூறியது.

பத்மநாப சுவாமி கோயிலில் 6 ரகசிய அறைகள் உள்ளன. இதில் 5 அறைகள் கடந்த 2015-ம் ஆண்டில் திறக்கப்பட்டன. அதில் ஒரு லட்சம் கோடி மதிப்பிலான தங்க நகைகள் இருந்தன. திறக்கப்படாமல் உள்ள அறையில் இதைவிட பல மடங்கு அதிக பொக்கிஷங்கள் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

அந்த அறையை திறக்க உச்ச நீதிமன்றமே தடை விதித்துள்ளது.
ரகசிய அறைகளை திறக்க மன்னர் குடும்பத்தினர் ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தற்போது கோயில் நிர்வாகம் மன்னர் குடும்பத்துக்கு கைமாறியிருப்பதால் ரகசிய அறை திறக்கப்படாது என்று கோயில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *