கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் பத்மநாப சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.
கோயிலின் ரகசிய அறைகளில் இருந்த தங்கம், வைரம், வெள்ளி நகைகளும் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த கோயில் உலக அளவில் கவனம் பெற்றது.
கோயிலின் நிர்வாகத்தை கேரள அரசு கையில் எடுத்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2011-ம் ஆண்டில் கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது.
கடந்த ஏப்ரல் மாதத்துடன் கேரள அரசு, திருவிதாங்கூர் மன்னர் குடும்ப தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றது. இந்த வழக்கில் நீதிபதிகள் உதய் உமேஷ் லலித், இந்து மல்ஹோத்ரா இன்று தீர்ப்பு வழங்கினர்.
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி திருக்கோயிலை நிர்வகிக்க திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு முழு உரிமை உள்ளது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.